Home » , » கனவுக் கன்னிகளின் கண்ணீர்க் கதை

கனவுக் கன்னிகளின் கண்ணீர்க் கதை

Written By Namnilam on Tuesday, July 8, 2014 | 7:13 PM


கடந்த 2013 ஏப்ரல் மாதம். தமிழ்த்திரையில் அப்போது வளர்ந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி தன் சித்தி மற்றும் இயக்குநர் ஒருவரின் கொடுமை தாங்காமல் தப்பிச் சென்றார் என பரபரப்பான செய்தி வெளியானது. ஒரு போராட்டத்துக்குப் பின் அஞ்சலி தற்போது திரும்ப வந்திருக்கிறார்.
 
இந்தக் கட்டுரையில் ஓடிப்போன அஞ்சலி பற்றி எதுவும் இல்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம். நாம் சொல்லவிருப்பது வேலி தாண்ட முடியாமலும், வேலிக்குள் வாழ முடியாமலும் தவிக்கும் பல அஞ்சலிகளைப் பற்றி. தன் குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் என்ஜீனியராகணும், டாக்டராகணும் என்று பெற்றோர்களே முடிவு செய்துக் கொண்டு தங்கள் ஆசைக்குள் குழந்தைகளைத் திணிப்பதை பார்க்கிறோம். 

அதேபோலத்தான் நடிக்க விருப்பம் இல்லாத சிறுமிகளையும் இளம்பெண்களையும் நடிகையாக திணிக்கும் கொடுமை நடந்து வருகிறது. முன்னதில் மூலதனம் பணம். பின்னதில் மூலதனம் அழகு. கொஞசம் சிவப்பாகவும் அழகாகவும் பிறந்து விட்டால் கேரளாவில் உள்ள தாய்குலங்களும் சரி, ஆந்திராவில் உள்ள தாய்குலங்களும் சரி, தங்கள் பிள்ளைகளை சினிமாவுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள். இதில் நடுத்தரத்திற்கும் கீழே உள்ள குடும்பங்கள்தான் அதிகம். 

இந்த வகையில் தமிழ்நாட்டை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். எந்த தாயும் தன் மகள் நடிகையாக வலம் வரவேண்டும் என்று அதை நோக்கி மகளை நகர்த்துவதில்லை. திடீரென்று நடிகையானால் கூட அதை தயக்கத்துடனேயே தான் ஏற்றுக் கொள்கிறார்கள். கணவன் என்ன காரணத்தினாலோ விட்டு விட்டு ஓடிப்போக, தாய் மறுமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல தனித்துவிடப்பட்ட மகள் தனக்கு ஒரு துணையோடு சென்னை வர, வந்த இடத்தில் சித்தியிடம் தஞ்சம் பெற, சித்தி அவளை நடிகையாக்க, பணமும் புகழும் ஒரு பக்கம் சேர்ந்தாலும் சுதந்திரம் பறிபோய் கொடுமைகளுக்கு ஆளாகி விட்டு விடுதலையாகியது ஓர் அஞ்சலி மட்டும்தான். 

இன்னும் ஒரு நூறு அஞ்சலிகள் சினிமாவுக்குள் அழுதுக் கொண்டும் கேமராவுக்கு முன் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். 13 வயதிலே ஹீரோயினாகும் ஒரு சிறுமி 25 வயதில் பெண் சுமக்க வேண்டிய அத்தனை சுமைகளையும் சுமக்க வைக்கப்படுகிறாள். கொஞ்சம் பிசகினாலும் முள்பாதையாக மாறிவிடும் சினிமாவில் அந்த பெண் துணிச்சலுடன் இறக்கிவிடப்படுகிறாள். நேரமும் காலமும் கூடிவந்து நடித்த படங்கள் நன்றாக ஓடினால் அந்த சிறுமிக்கு மலர்ப் பாதையும் கரன்சி நோட்டுகளும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அவள் பாதை முள்பாதையாக மாறும். 13 வயதில் மகளை சினிமாவுக்குள் திணிக்கும் பெற்றோர்களை குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளினால் தப்பே இல்லை. ஆண்டுக்கு 50 முதல் 60 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். 5 பேர் தான் வெற்றிப் பெறுகிறார்கள். மீதமுள்ள 55 பேரை தேடிப் போனால் அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முள்பாதையில் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

 ‘முள்பாதை’ என்று குறிப்பிடுவதை கொஞ்சம் கடுமையான வர்த்தையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ‘என்னை அங்கே போ….. இங்கே போ….. என்று விரட்டி கொடுமைப்படுத்தினார்கள். சில முக்கியஸ்தர்களுடன் என்னை இணைத்து வேண்டுமென்றே வதந்தி பரப்பினார்கள்” என்று அஞ்சலி கண்ணீரோடு சொன்னதற்கு பின்னால் அத்தனை வலிகள் இருக்கிறது.

இன்றைக்கு புதிதாக நடிக்க வரும் பெரும்பாலான ஹீரோயின்களின் அண்ணன் என்றும் அம்மா என்றும் அப்பா கூறிக் கொண்டு பார்டிகாட்டாக வருகிறவர்கள் அவர்களை நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கும் ஏஜெண்டுகள் போல நடந்து கொள்வது உண்டு. சென்னை ஓட்டல்களிலும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலும் சிறுவர்களின் உழைப்பு சுரண்டல் நடப்பது போல இது அழகு சுரண்டல். பேராசை பிடித்த பெற்றோர்கள், பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக வரும் நடிகைகளை தேடி அலையும் தராரிப்பாளர்கள், அறிமுகப்படுத்தினோம் என்ற ஒரே காரணத்திற்காக பெண்டாள நினைக்கும் சண்டாள இயக்குநர்கள். இத்தனை வில்லன்களுக்கு மத்தியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள், மக்கள் கவனத்திகு வராத பல கனவுக் கன்னிகள்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger