Home » , , , , , , , » அரசின் கொள்கைக்கு எதிராக நள்ளிரவில் கூட போராட வேண்டிய நிலைக்கு தமிழர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் - சிவமோகன்

அரசின் கொள்கைக்கு எதிராக நள்ளிரவில் கூட போராட வேண்டிய நிலைக்கு தமிழர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் - சிவமோகன்

Written By Namnilam on Saturday, February 22, 2014 | 3:09 PM

அரசின் கொள்கைக்கு எதிராக நள்ளிரவில் கூட போராட வேண்டிய நிலைக்கு தமிழர்கள் நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். 


siva mogan
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மிச்சல் ஏர்வினுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகனுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை வவுனியாவில் நடைபெற்ற சந்திப்பின் போதே வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஏர்வினிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


இச் சந்திப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பரம்பரை வழித்தோன்றலாக தமக்கு உரித்துடைய நிலம் இன்று தம்மிடம் இருக்குமா? என்ற பயத்தோடு தான் ஒவ்வொரு பொழுதுகளும் தமிழ் மக்களுக்கு புலருகின்றன. காலை நீட்டி படுத்திருக்கும் நாம் சற்று கண்ணயர்ந்து காலை மடக்கி விட்டோம் என்றால் போதும் மீண்டும் காலை நீட்டுவதற்கு அந் நிலம் நம்மிடம் இருக்காது பறி போயிருக்கும். அத்தகைய வேகத்தில் சிறீலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழர் தாயக பிரதேசங்களில் தீவிரம் பெற்றுள்ளன. 

அதி தீவிரமாக முனைப்பு பெற்றுள்ள தமிழர் பூர்வீக பண்பாட்டு பாரம்பரிய நிலங்களை பௌத்தமயமாக்கும் சிங்கள பேரினவாத அரசின் கொள்கைக்கு எதிராக நள்ளிரவில் கூட போராட வேண்டிய நிலைக்கு தமிழர்கள் நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். நிலம் எங்கள் வாழ்வுரிமை. எனவே நிலத்துக்கான போராட்டம் என்பது எங்கள் வாழ்வுரிமைக்கான போராட்டமாகும். இந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளங்கிக்கொண்டு சர்வதேச நாடுகள் எமக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் குடிமகளதும் எதிர்பார்ப்பாகும். 

எங்களுடைய எதிர்பார்ப்புகள் ஈடேறும் வரை எமக்கான அங்கீகாரத்தை பெறும் வரை தமிழ் இனத்தினுடைய இருப்புக்கான போராட்டத்தை நாங்கள் நடத்துவது பயங்கரவாத செயலாகாது. உங்கள் மண்ணில் நீங்கள் வாழ முடியாத உங்கள் மண்ணை நீங்கள் ஆள முடியாத ஒரு சூழலில் அது தொடர்பில் உங்களுடைய எண்ணங்கள் எதிர்வினையாற்றல்கள் எப்படியிருக்குமோ அதே உணர்வுடன் கூடியதே எங்கள் போராட்டமும். அதனுடன் ஒத்த காரிய கருமமாற்றல்களும் ஆகும். 

நிலம் எனும் கருவி இல்லாமல் இந்த உலகில் எந்த ஜீவராசிகளும் உயிர் வாழ முடியாது எனும் போது இதற்கு விதிவிலக்காக எப்படி தமிழ் மக்கள் மட்டும் உயிர் வாழ முடியும். பொழுது விடிந்ததும் படை பட்டாளத்துடன் நாங்கள் தென்னிலைங்கையில் நிலம் பிடிக்க ஒருநாளும் புறப்பட்டு போனதில்லை. நம் நிலத்தில் நாம் வாழ்வதற்காக எங்கள் வீரர்கள் சிந்திய இரத்தம் இன்று நாங்கள் சிந்திக்கொண்டிருக்கின்ற கண்ணீர் எங்கள் உணர்வுகளுக்கு எல்லாம் சர்வதேச சமுகம் மதிப்பளிக்கும் என்று நாங்கள் பெரிதும் நம்புகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இச்சந்திப்பின் போது சிறீலங்கா அரச படைகளால் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பற்றிய தகவல் திரட்டையும் சிவமோகன் ஏர்வினிடம் கையளித்துள்ளதோடு ஒலுமடு பிரதேசசபைக்கு உரித்துடைய ஆயுர்வேத வைத்திய நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் என்பன சிறீலங்கா அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பற்றியும் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் சிவில் சமுக செயல்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள இராணுவ படைத்தளம் பற்றியும் வாவட்டி, பண்டாரவயல், கேப்பாப்பிலவு பகுதிகளில் சிறீலங்கா அரச படைகளால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் விவசாயிகளின் காணிகள் பற்றியும் மல்லாவியில் தனிநபர் காணியில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் பற்றியும் வவுனியாவில் இடம்பெற்றுள்ள கலாவோபஸ்வெள சிங்கள குடியேற்றம் பற்றியும் ஒதியமலையில் சிறீலங்கா அரசால் திட்டமிட்டு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய டொலர்பார்ம், கென்பார்ம் பற்றியும் சிவமோகன் ஏர்வினிடம் முறையிடப்பட்டதாகவும் தெரிவித்தார். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger