பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளை மீறும் தலைமைத்துவ செயற்பாடுகளே கனடா குறித்த அமைப்பிற்கான நிதியுதவிகளை நிறுத்தியமைக்கு பிரதான காரணமாகும். இலங்கையின் உள்ளக செயற்பாடுகளை கண்டறிய தென்னாபிரிக்காவின் விஷேட பிரதிநிதியும் வருகை தரவும் உள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையின் கீழ் உள்ள பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளே இவ்வாறு செயற்படுவதானது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உகந்தது அல்ல என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஊடக பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி. எச்சரித்தார்.
இலங்கை மீதான இத்தகைய சர்வதேச கெடுபிடிகளுக்கு அரசாங்கமே காரணமாகும். பொது நலவாய அமைப்பின் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமைகளை காப்பதற்கும் மத நல்லிணக்கத்தினை பாதுகாப்பதற்கும் மாறாக செயற்பட்டதே அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கூறியதாவது, தற்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ள அதே வேளை மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளும் மேலோங்கியுள்ளன. இதற்கு அரசாங்கமே மூலகாரணமாகும். எவ்வாறாயினும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கிடையாது இத்தகைய செயற்பாடுகள் பொதுநலவாய அமைப்பின் கொள்கை பிரகடனத்திற்கு மாறானவை.
இதே வேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே குறித்த அமைப்பின் தலைவராக செயற்பட்டு வருகிறார். இருப்பினும் பொது நலவாய அமைப்பின் கொள்கை பிரகடனங்களை பாதுகாப்பதும் இல்லை. அவற்றை அமுல்படுத்தவதுமில்லை. பிரித்தானிய மகாராணியிலும் கண்காணிப்பிலும் அவரது உத்தரவிற்கு அமைய செயற்படும் அமைப்பே பொதுநலவாய அமைப்பாகும்.
இத்தகைய அமைப்பின் தலைவராக செயற்பட்டு அவற்றின் கொள்கைகளை நிறைவேற்றாமையினாலேயே கனடா பொதுநலவாய அமைப்பிற்கு நிதி உதவி வழங்குவதனை இடை நிறுத்தியுள்ளது.
இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயத்தின் பிரதிபலனாக இலங்கையின் உள்ளக செயற்பாடுகளை கண்டறிய அந்நாட்டின் விஷேட பிரதிநிதி இலங்கை வருகை தரவுள்ளார். இவ்வாறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதி வருகை தருகின்ற நிலையில் அரசினால் தனது குற்றங்களை மூடி மறைக்க முடியாது, அரசாங்கம் குற்றமிழைத்துள்ளமை தெட்டத் தெளிவானது.
தென்னாபிரிக்கா இலங்கை அரசிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது தென்னாபிரிக்காவும் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளை கண்டறிய களமிறங்கியுள்ளது. அத்தோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தனது சமூக உரிமைகளுக்காக போராடி வருகிறது.
Post a Comment