Home » » டமால் டுமீல் - விமர்சனம்

டமால் டுமீல் - விமர்சனம்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 12:17 PM

திரைக்கு வந்த நாள்: 18 ஏப்ரல் 2014
வகைகள்: காதல், நாடகம், விறுவிறுப்பு
சான்றிதல்: U/A
இயக்குனர்: ஸ்ரீ
தயாரிப்பாளர் / வினியோகிஸ்தர்: கேமியோ பிலிம்ஸ் இந்தியா, சி ஜே ஜெயகுமார்
வசனகர்த்தா: ஸ்ரீ
படமனை: கேமியோ பிலிம்ஸ் இந்தியா
நடிகர்-நடிகைகள்: கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, ரம்யா நம்பீசன், வைபவ்


சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார் நாயகன் வைபவ். தந்தையை இழந்த இவருக்கு தாய் மற்றும் சகோதரி இவர்கள் இருவரும் அவர்களுடைய சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள்.


இவர் மட்டும் சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் வைபவ், அவருக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார். வைபவ் நன்றாக சம்பாதிப்பதால் அதிக வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.


மறுபக்கம் நாயகி ரம்யா நம்பீசனையும் காதலித்து வருகிறார். ரம்யா நம்பீசன் தன் தந்தையிடம் காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். இந்நிலையில் வைபவ் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிடுகிறது. இதனால் மனமுடைந்து போகிறார் வைபவ். இதற்கிடையில் போலி மருந்துகளை விற்றுவரும் சாயாஜி ஷிண்டேவை போலீசார் தேடி வருகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க நண்பனான கோட்டா சீனிவாசராவிடம் தன் பணத்தை ஆட்கள் மூலம் கொடுத்தனுப்ப சொல்கிறார்.


பணத்தை எடுத்து செல்லும் கோட்டா சீனிவாசராவின் ஆட்கள் தவறுதலாக வைபவ் தங்கியிருக்கும் வீட்டின் முன் வைத்துவிட்டு செல்கிறார்கள். வெளியில் வந்து பார்க்கும் வைபவ் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக் கொள்கிறார். பணம் சரியான இடத்திற்கு போய் சேராததால், கோட்டா சீனிவாசராவும், சாயாஜி ஷிண்டேவும் பணத்தை தேடுகிறார்கள்.


இந்நிலையில் இந்த பணத்தை வைத்திருக்கும் வைபவ், பணத்தை என்ன செய்தார்? பணத்தை தேடி வரும் கோட்டா சீனிவாசராவ் மற்றும் சாயாஜி ஷிண்டேவிடம் வைபவ் மாட்டிக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.


படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வைபவ், மிகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். காட்சிகளுக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தாமல் நடித்திருப்பது வருத்தத்திற்குரியது. நாயகி ரம்யா நம்பீசனுக்கு காட்சிகள் குறைவு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.


வில்லன்களாக வரும் கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே ஆகியோரில் வில்லத்தனத்தில் மிரட்டல் இல்லை. காமெடியைத்தான் வரவழைத்திருக்கிறார்கள். தமன் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக ‘டமால் டுமீல்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. எட்வின் சகாய் ஒளிப்பதிவு காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறது.


இயக்குனர் ஸ்ரீ, இக்கதையை திரில்லராக சொல்ல வருகிறாரா? அல்லது காமெடியாக சொல்லவருகிறாரா? என்பதே புரியவில்லை. படத்தைப் பார்க்கும் பொழுது, பார்ப்பவர்கள் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் ஏற்படவில்லை. நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதற்கு திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டுவிடுகிறார்.


மொத்தத்தில் ‘டமால் டுமீல்’ சத்தம் இல்லாத வெடியுடன்…

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger