Home » » காந்தர்வன் - விமர்சனம்

காந்தர்வன் - விமர்சனம்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 3:28 PM

நாயகன் கதிர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். ஆதரவற்ற அவர் சக ஊழியர்களுடன் ஒரு மேன்சனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மிகுந்த கோபம் கொண்டவர். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். லாரியும் பைக்கும் வேகமாக ஓட்டக்கூடியவர். இப்படி ஒரு நாள் பைக்கை வேகமாக ஓட்டும் போது நாயகி ஹனிரோஸ் இவரைப் பார்த்து கண்டிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கதிர், ஹனிரோசை அடித்து விடுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது.


இன்னொரு நாள் லாரியை வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஹனிரோசின் தந்தை மீது மோதி விடுகிறார். இதனால் அவருக்கும் கதிருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதன்பிறகு கதிர் செய்யும் ஒரு நல்லச் செயலை ஹனிரோஸ் பாராட்டி அவருக்கு முத்தம் தருகிறார். இதிலிருந்து கதிருக்கு ஹனிரோஸ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஹனிரோஸ் ஏற்க மறுப்பதுபோல் நடித்து பிறகு காதலை ஏற்றுக்கொள்கிறார்.


இதற்கிடையில் ஹனிரோசுக்கு அவரது தந்தை மாப்பிள்ளை பார்க்கிறார். வேறு மாப்பிள்ளையை ஏற்க மறுத்த ஹனிரோஸ், தான் லாரி டிரைவர் ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். ஹனிரோசின் தந்தையோ லாரி டிரைவர் என்றாலே வெறுக்கிறார். இருந்தாலும் மகளின் விருப்பத்திற்காக கதிரை பெண் பார்க்க வரும்படி கூறுகிறார்.


அதன்படி வீட்டுக்கு பெண் பார்க்க வரும் கதிரை பார்த்தவுடன் ஹனிரோசின் தந்தைக்கு கோபம் வருகிறது. அவரை அடித்து வெளியே துரத்துகிறார். பிறகு ஹனிரோசிடம் என்னை லாரி ஏற்றிக் கொல்லவந்த லாரி டிரைவர் இவன் தான் என்று சொல்கிறார். இதனால் ஹனிரோஸ் மன வேதனை அடைகிறார்.


பிறகு அன்று இரவு மது அருந்திவிட்டு ஹனிரோஸ் வீட்டுக்குச் செல்கிறார் கதிர். என்னுடன் வா திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அழைக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஹனிரோசை வலுக்கட்டாயமாக அழைக்கிறார். தடுக்க முயன்ற தந்தையை அடித்து விடுகிறார். தந்தையை அடித்ததால் கோபம் அடைந்த ஹனிரோஸ், கதிரை வெறுக்க ஆரம்பிக்கிறார். இதிலிருந்து இருவரும் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.


படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், நடிக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். காதல், நடனம் என பொருந்தாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது. கோபக்காரர் என்பதால் படம் முழுக்க முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வருகிறார்.


நாயகி ஹனிரோஸ், இப்படத்தில் தான் அறிமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார்.


கஞ்சனாக வரும் கஞ்சா கருப்பு ஓரிரு காட்சிகளில் மட்டும் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். காதல் தண்டபாணி, வி.ஓ.ஆண்டமுத்து, சபாபதி, சண்முகசுந்தரம், கிரேன் மனோகர், செல்லமுத்து, நெல்லை சிவா என குணச்சித்திர பட்டாளம் இருந்தாலும், தங்கள் பாத்திரங்களில் ஒன்றியதாகத் தெரியவில்லை.


அலெக்ஸ் பால் இசையில் ஒரு பாடலை மட்டும் ரசிக்கலாம். அனில் சேகர் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காதலை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் சலங்கை துரை, அந்த காதலை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம். காதலுக்கான வலு இப்படத்தில் குறைவாக உள்ளது. தேவையற்றக் காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


மொத்தத்தில் ‘காந்தர்வன்’ பரவாயில்லை….

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger