Home » » ராஜீவ் நினைவுநாளைப் புறக்கணித்த தமிழக முதல்வர்

ராஜீவ் நினைவுநாளைப் புறக்கணித்த தமிழக முதல்வர்

Written By Namnilam on Friday, May 23, 2014 | 11:12 AM

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தமிழக தலைமைச் செயலகத்தில் வழக்கமாக நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 21- ந்தேதி தீவிரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் மாநில தலைமைச் செயலகங்களில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி கடைபிடிக்கப்படுவது வழக்கம். தமிழக தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்வார்.
ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதற்கென நேற்று ஷாமியானா பந்தல்கள் போடப்பட்டிருந்தாலும் இந்த நிகழ்வு இன்று நடக்கவில்லை.


இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் கடும் கண்டனத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த உறுதிமொழி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரால் ஏற்கப்பட்டு, அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  பேசிய அவர், வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஏன் நடக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால், ஒவ்வொரு துறையிலும் துறைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், முதல்வர் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger