Home » » ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வி

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வி

Written By Namnilam on Friday, May 23, 2014 | 11:26 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. சென்னை அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதாகி விட்டது. ல்பனாஸ், ஈஸ்வர் பாண்டேவும் கழற்றி விடப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பவான் நெஜி, ஆல்-ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் (ஆஸ்திரேலியா), டேவிட் ஹஸ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆட்டத்திற்கு ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற டேரன் சேமி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


சுமித் அதிரடி


இதையடுத்து வெய்ன் சுமித்தும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். புவனேஷ்வர்குமாரின் முதல் ஓவரில் சுமித்தும், ஸ்டெயினின் அடுத்த ஓவரில் பிளிஸ்சிஸ்சும் தலா 3 பவுண்டரிகளை ஓடவிட்டு, ஆட்டத்தை அமர்க்களமாக ஆரம்பித்தனர். ஆனால் பிளிஸ்சிஸ்சுக்கு அதிர்ஷ்டம் இல்லை. சுமித், நேராக அடித்த பந்தை பவுலர் கரண் ஷர்மா தொட்டு விட, பந்து எதிர்முனை ஸ்டம்பை பதம் பார்த்தது. அப்போது பிளிஸ்சிஸ் (19 ரன், 11 பந்து, 4 பவுண்டரி) கிரீசை விட்டு வெளியே நின்றதால் பரிதாபமாக ரன்-அவுட் ஆனார். அடுத்து ரெய்னா வந்தார்.


மறுமுனையில் தொடர்ந்து வேட்டையாடிய வெய்ன் சுமித், தோதாக கிடைத்த சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூலின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்க விட்டு அசத்தினார். இதனால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 60 ரன்களை எடுத்தது. அடுத்த ஓவரில் சுமித் 47 ரன்களில் (28 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். சிக்சருக்கு முயற்சித்த ரெய்னா (4 ரன்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகி நடையை கட்டினார். இதன் பின்னர் கேப்டன் டோனியும், டேவிட் ஹஸ்சியும் ஜோடி சேர்ந்தனர். ஹஸ்சி, ரன் சேகரிப்பில் வேகம் காட்டினாலும், கேப்டன் டோனி தடுமாறியதால் ரன்ரேட் விகிதம் சரிந்தது. அவர் 25 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.


டோனி-ஹஸ்சி அரைசதம்


ஆனால் வீணடித்த பந்துகளை டோனி இறுதி கட்டத்தில் சரிகட்டி, அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார். அபாயகரமான பந்து வீச்சாளர் ஸ்டெயின் வீசிய கடைசி ஓவரில் டோனி 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 24 ரன்கள் விளாசி உள்ளூர் ரசிகர்களை மகிழ்வித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஐதராபாத் பவுலர்கள் 68 ரன்களை வாரி வழங்கினர்.


டோனி 57 ரன்களுடனும் (41 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), டேவிட் ஹஸ்சி 50 ரன்களுடனும் (33 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றனர்.


வார்னர் மிரட்டல்


அடுத்து 186 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ராக்கெட் வேகத்தில் பேட்டை சுழட்டினார். ஹேஸ்டிங்ஸ் ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரி நொறுக்கி தனது அரைசதத்தை ‘பவர்-பிளே’க்குள் வார்னர் நிறைவு செய்தார். அவரது சூறவாளி ஆட்டத்தால் ஐதராபாத்தின் ரன்-ரேட் 10 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. இறுதியில் அவர் 90 ரன்களில் (45 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச் 7 ரன்னிலும், கேப்டன் டேரன் சேமி ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (64 ரன், 50 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


ஐதராபாத் வெற்றி


ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத்துக்கு இது 6-வது வெற்றியாகும். அதே சமயம் 13-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது தோல்வியாகும். கடைசி 3 ஆட்டங்களிலும் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி தனது கடைசி லீக்கில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை நாளை எதிர்கொள்கிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger