Home » » தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை

தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை

Written By Namnilam on Tuesday, May 6, 2014 | 4:53 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடிதமொன்றை திங்கட்கிழமை (5)அனுப்பி வைத்துள்ளார்.


இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அரசாங்கத்தின் சுற்று நிருபங்களுக்கமைய காணி முதலீட்டு திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குதல் சார்பான நடவடிக்கையின் கீழ் அல்லாது பிரதேச காணிப் பயன்பாட்டுக்குழு, மாவட்ட காணிப் பயன்பாட்டுக்குழு போன்றவற்றின் அங்கீகராமின்றி தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி வழங்கப்படுவதாக பொதுமக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்படி வாகரைப் பிரதேசத்தில் தம்பிரான்வெளியில் 400 ஏக்கர், காயான்கேணியில் 350 ஏக்கர், குருவிக்கல்மலை 01ல் 780 ஏக்கர், குருவிக்கல்மலை 02ல் 670 ஏக்கர், வவுணதீவில் 50 ஏக்கர், மற்றும் ஊறணி, திராய்மடு பகுதிகளையும் கொண்டதாக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


யுத்தத்தின் பின் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கும், மீள்கட்டுமான செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டிய நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு எமது மாவட்ட காணிகளை வழங்குவதால் எமது மாவட்ட மக்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்செயற்பாடு குந்தகமாக அமைகின்றது.


எனவே தயவு செய்து மேற்தரப்;பட்ட இடங்களில் தனியார்  நிறுவனங்களுக்கு எமது காணிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். பதிலை விரைவாக எதிர்பார்க்கின்றேன் என மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பிரதிகள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவலக அமைச்சின் செயலாளர், காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு தவிசாளர், மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக்குழு தவிசாளர், வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழு தவிசாளர், வாகரை பிரதேச செயலாளர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர், வவுணதீவு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger