Home » » வடக்கில் அழுகுரல், தெற்கில் வெற்றிக் கொண்டாட்டம், கஜதீபன் விசனம்

வடக்கில் அழுகுரல், தெற்கில் வெற்றிக் கொண்டாட்டம், கஜதீபன் விசனம்

Written By Namnilam on Thursday, May 15, 2014 | 2:10 PM

"ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன. தெற்கு அறையில் வெற்றிக் கோஷங்கள் கேட்கின்றன, அப்படியாயின் அந்த வீட்டுக்குள் வடக்கும் - தெற்கும் ஒன்றாக வாழ முடியுமா? அதிலும் வடக்கின் அழுகுரல்களுக்குக் காரணமாக இருந்த தெற்குப் பகுதியினரே, வடக்கின் சோகங்களை அனுஷ்டிக்க விடாமல், தமது வெற்றியை, பலாத்காரமாகக் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதுதான் இன்றைய நாட்டின் நிலைமை. இப்படி விசனத்துடன் கூறினார் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்.


நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழா இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில், சனசமூக நிலைய மைதானத்தில் யாழ். மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு,


 இன்று சிங்கள பௌத்தர்களின் புனித நாள். அமைதியாக தர்ம சிந்தனைகளோடு வாழும் வழிமுறையை உலகிற்கு வழங்கியதில் பௌத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு நடந்து வந்திருக்கின்றார்கள், எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் அனுபவ ரீதியாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உண்மையான பௌத்த சிந்தனைகளுடன் முற்று முழுதாக முரண்பட்டு உள்ளன. பௌத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் எனச் சொல்லும் இந்த ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களைப் பார்த்துத் தானாகவே வெட்கித் தலை குனிந்திருப்பார்.


இந்த மே மாதம் பௌத்தர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவமானதோ, புனிதமானதோ, அவ்வாறே தமிழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வுபூர்வமானதுமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உண்ர்வுபூர்வமான வலிசுமந்த வாரமாகும். இறுதிப்போரிலே இலட்சக்கணக்கில், கடற்கரை ஓரத்தில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வாரமாகும். அதில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டுக் கண்ணீர் கூட விட முடியாதபடி, அரசாங்கம் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.


தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை கோஷங்களுடன் தான் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களையும் அதைக் கொண்டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்தும் வருகின்றது. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலையாகும். இது பௌத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும். - என்றார். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.மோகனதாஸ், யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் எம்.இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger