Home » , , , , , » வடபகுதி பெரும்போக விளைச்சலில் 92 ஆயிரம் மெ.தொன் நெல் இழப்பு

வடபகுதி பெரும்போக விளைச்சலில் 92 ஆயிரம் மெ.தொன் நெல் இழப்பு

Written By Namnilam on Tuesday, February 25, 2014 | 6:18 PM

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் 29 ஆயிரத்து 988 ஏக்கர் நெற் செய்கை முற்று முழுதாக நூறு வீதமும் அழிந்துள்ளது. அத்துடன் கணிசமான அளவு பகுதி நிலையிலும் சேதமடைந்துள்ளது.  முற்று முழுதாக சேதமடைந்த நெற்பயிர்ச் செய்கையில் மட்டும் 92 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


நெல்_அறுவடை_செய்யும்_விவசாயிகள்_படம்_2



கிடைக்கப் பெற்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப்பணிப்பாளர் சி.சிவகுமார் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாண நெற்பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட முற்று முழுதான சேதம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாயத் திணக்கள மதிப்பீடுகள் மூலம் தெரியவருவதாவது: யாழ்.மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட 26,519 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையில் 4, 989 ஏக்கர் நெற்பயிர்கள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளன.   கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 55,079 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையில் 14,824 ஏக்கர் பயிர்ச் செய்கை முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.  


முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 36,729 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையில் 2296 ஏக்கர் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.   மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 11,770 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையில் 963 ஏக்கர் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.   வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 29,178 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையில் 6,916 ஏக்கர் முற்று முழுதாகச் சேதமடைந்துள்ளது.   வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 29, 988 ஏக்கர் நெற்பயிர் முற்று முழுதாக நெல் விளைச்சல் நூற்றுக்கு நூறு வீதமும் சேதமடைந்துள்ளது.


இதன்மூலம் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் எதிர்பாராத பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.   நெற்பயிர்ச் செய்கை முழுமையாக சேதமடைந்த வகையில் எதிர்பார்க்கப்பட்ட நெல் விளைச்சலில் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தமாக 91,959 மெற்றிக்தொன் இழப்பு   ஏற்பட்டுள்ளது.   வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கையில் 29,988 ஏக்கர் முற்றுமுழுதாக சேதமடைந்திருப்பதோடு பகுதி நிலையிலும் கணிசமான அளவு சேதமடைந்துள்ளது.   காலந்தப்பிய மழை வீழ்ச்சி, காலநிலை முரண்பாடு போன்ற இயற்கை நிலைமைகளினால் கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் கடந்த பெரும் போகத்தில் பெரியளவில் நெற்பயிர்ச் செய்கை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் கூறப்படுகிறது. 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger