Home » » ஆசிரியர் வளம் சரியாகப் பங்கீடு செய்யப்படுகின்ற போதே ஏழை மாணவர்களுக்கும் நிறைவான கல்வி கிட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

ஆசிரியர் வளம் சரியாகப் பங்கீடு செய்யப்படுகின்ற போதே ஏழை மாணவர்களுக்கும் நிறைவான கல்வி கிட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

Written By Namnilam on Tuesday, February 25, 2014 | 6:28 PM

வடக்கு மாகாண சபையின் கல்விக்கு பொறுப்பானவர்கள் ஆசிரியர் வளத்தை சரியாக பங்கீடு செய்தால் மட்டுமே ஏழை மாணவர்களுக்கும் நிறைவான கல்வியை பெறுவதற்கான வாய்ப்புக்கிட்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 


aasp02 aasp04 aasp06

இன்றைய தினம் (24) தட்டுவன்கொட்டி அ.த.க பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பழமையான பாரம்பரிய கிராமங்களில் தட்டுவன் கொட்டியும் ஒன்று.  ஆனால், யுத்தம் இந்த கிராமத்தின் இருப்பை அவ்வப்போது கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. இக்கிராமம் யுத்தத்தால் முற்றாக இடம் பெயர்ந்ததன் விளைவாக உருப்பெற்ற கண்ணகிநகர் எனனும் கிராமம் கடந்த காலங்களில் இக்கிராமத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றது. இருப்பினும், மீள்குடியேற்றத்தின் பின்னரும் தட்டுவன்கொட்டி கிராம மக்கள்  கண்ணகிநகரில் மட்டுமே வாழவேண்டும் என்ற நிலை வலுப்பெற்றபோது பாரம்பரிய இந்த கிராமம் தொடர்ந்தும் நிலைபெற வேண்டும் என்பதில் நாம் அதிக கரிசனையோடு செயற்பட்டோம். 

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இக்கிராமத்தின் அடையாளத்தை குறிப்பிடுவதற்கு கூட எந்தவொரு தடயமும் இருக்கவில்லை. ஆனால் இன்று பாடசாலைக்கான கட்டடங்கள் உட்பட அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு கிராமத்தின் பல தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள ஒரு நிறைவான கிராமமாக காட்சியளிக்கின்றது.

இவை அனைத்தையும் விட ஒரு கிராமம் கல்வியால் மேம்படுவதே அதன் மேம்பாட்டுக்கான முக்கிய கட்டத்தை எட்டியதாக அமையும். கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் கல்வியலாளர்கள் உருவாக்கப்படாமையும் கிராமப் புறங்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத காரணத்தினாலும் இன்று கிராமப் புறங்களில் கல்வியை மீளக்கட்டியெழுப்புவதில் அதிக சிரமங்களை எதிர்கொள் நேரிடுகின்றது. இருப்பினும் நாம் அந்த முயற்சியிலிருந்து சோர்வடையவில்லை. நகர்புறங்களின் கல்வி மேம்பாட்டுக்கு நிகராக கிராமங்களிலும் கல்வித்துறை மேம்பட வேண்டும் என்பதற்காக அச்செயற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டோம். அதன் விளைவாக கல்வியில் கிராமப்புற மாணவர்களும் சாதனை படைக்கும் அளவுக்கு வரலாற்றுத் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அத்தோடு மாவட்டத்தின் ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டிலும் மிகக் குறுகிய காலத்தில் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நாம்  ஏற்படுத்தியிருக்கின்றோம். அத்தோடு கடந்த மூன்று வருடங்களாக கிராமப்புற பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்குவதற்கு நாம் பல நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டோம். ஆயினும் மாணவர்களின் கல்விநிலை வீழ்ச்சி அடைவதற்கு இடமளிக்காது ஆசிரியர் வளங்களை வழங்கி வந்தோம். புதிதாக ஆசிரியர் நியமனங்கள் பெறுபவர்களை நிபந்தனையின் அடிப்படையில் வன்னி மாவட்டங்களுக்கே நியமித்திருந்தோம். அதில் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்வதென்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகவே இருந்தது.

இன்று வடமாகாணத்தின் ஆசிரியர் ஆளணியில் 78 விகிதமான வளம் யாழ் மாவட்டத்திற்குள்ளேயே உள்ளது. யாழ் மாவட்டம் கடந்த காலங்களில் கல்வியால் மேம்பட்டிருந்ததால் வன்னி மாவட்டங்களில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக யாழ்.மாவட்ட கல்வியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அரச தொழில் வாய்ப்புக்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்,யுவதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் நாம் உச்சக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களை சார்ந்தவர்களைக் கொண்டு இன்னுமொரு மாவட்டத்தின் அரசசேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பில்லை.  ஆசிரியர் வளம் பயன்பாடற்ற வகையில் அளவுக்கு அதிகமாக நிரப்பப்பட்டு முடக்கப்பட்டிருக்கும் வளம் சமமாக பங்கீடு செய்யபடுகின்ற நிலையிலேயே வன்னி மாவட்டங்களிலும் அறிவார்ந்த சமூகம் உருவாகுவதற்கான வாய்ப்பு கிட்டும். இவ்விடயத்தில்  ஆசிரியர் சமூகம் அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கு ஒரு கல்வி வசதி செல்வந்தர்களுக்கு மற்றொரு வசதி என்ற ஏற்றத்தாழ்வு நிலையினை மாற்றமுடியும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு வடக்கு மாகாண சபையின் கல்விக்கு பொறுப்பானவர்கள் கையாண்டு வரும் ஆசிரியர் வளத்தைத் தேடி மாணவர்கள் செல்வது என்ற கொள்கை ஏழை மாணவர்களின் கல்வியை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். மாணவர்களுக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் கூறினார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 125 ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தங்களை நிறைவு செய்துகொண்டு ஏப்ரல் மாதம் இடமாற்றம் பெறுகின்றார்கள். ஆனால் இன்றுள்ள நிலையிலேயே பல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. எனினும் இவற்றுக்கான மாற்றீடுகள் தொடர்பான எந்தத்திட்டமும் வடக்கு மாகாண கல்விக்கு பொறுப்பான நிர்வாகத்திடம் இல்லை. எனவே வீழ்ச்சி கண்டுவரும் கல்வியை பாதுகாப்பதற்காக உரியவர்களிடம் தட்டிக்கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. அதை மக்கள் சரியாகப் பயன்படுத்தினால்  வீழும் கல்வியை மீளக்கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

கிளிஃதட்டுவன்கொட்டி அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் கருணானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்டுத்தும் வகையில் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்குபற்றினர். 

இந்த நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் வை.தவநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார.; அத்தோடு கண்டாவளை கோட்டக்கல்வி அதிகாரி தர்மகுலசிங்கம், பாடசாலை முன்னாள் அதிபர்; திருமதி. சண்முகநாதன், கிராம சேவையாளர் அம்பிகைபாலன் மற்றும் அயற்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger