Home » , , , » இரணைமடு விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் ஐவர் கொண்ட குழு ! ?

இரணைமடு விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் ஐவர் கொண்ட குழு ! ?

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 9:28 PM

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டு செல்வதால் ஏற்படும் நெருக்கடி நிலை தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கென ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை நியமிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.


DSC_0399(2)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல் இன்று யாழ். பொதுநூலக மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது.


இந்தக் கூட்டத்தில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு செல்வது தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலையில், குறித்த திட்டத்திற்கென நிதி ஒதுக்கீடு மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு, கிளிநொச்சி மக்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி நிலை குறித்து விளக்கமளித்து குறித்த திட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பில் குறித்த குழு ஆராயும் என கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டிருக்கின்றது.


ஐவர் கொண்ட குழுவிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை தாங்குவார் என்றும், ஏனைய நால்வரும் பின்னர் தேர்வு செய்யப்படுவர் என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நண்பகல் வரையான அமர்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்திருக்கிறது.


இதேவேளை, இரணைமடு விவகாரம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக வருமாறு கிளிநொச்சி விவசாயிகள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பினர் முடிவினை எடுத்துவிட்டு தம்மிடம் அது தொடர்பில் தெரிவித்ததாகவும், கடும் விசனம் வெளியிட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பினரின் குறித்த முடிவினை தாம் ஏற்கப்போவதில்லை என்றும், இரணைமடு நீரினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்காக தாம் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்.


இதேவேளை, கூட்டமைப்பின் கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்ற நிலையில், இன்று மாலை கட்சியின் அதிகார ரீதியான அறிவித்தல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger