Home » , , , , , » சட்டவிரோத காடழிப்புக்கு வனஇலகா அதிகாரிகளும் உடந்தை- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

சட்டவிரோத காடழிப்புக்கு வனஇலகா அதிகாரிகளும் உடந்தை- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

Written By Namnilam on Monday, February 24, 2014 | 8:50 PM

வவுனியாவில் இடம்பெறுகின்ற சட்டவிரோத காடழிப்புக்கு வவுனியா வனஇலகா அதிகாரிகள் துணைபோவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.


ananthan-mp


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில மாதங்களாக ஓமந்தை அரசமுறிப்பில் தனியார் ஒருவரால் 300 ஏக்கருக்கு மேற்பட்ட வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ள காடு அழிக்கப்பட்டு, அதில் உள்ள பெறுமதி மிக்க பாலை, முதிரை போன்ற மரங்கள் வியாபாரத்திற்காக வெட்டப்பட்டு வருகின்றது.


அக்காட்டுநிலம் தனக்குரியது என்று கூறுவதற்கேதுவாக, நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாத சட்ட வலுவற்ற யப்பான் உறுதி என அழைக்கப்படும் ஒரு பொய் உறுதியை தயார் செய்து வைத்துக் கொண்டே இக்காடழிப்பில் ஈடுபட்டுள்ளார்.ஆனால் சுற்றாடல் அமைச்சின் 20104 சுற்று நிருபத்தின் படி, காட்டில் உள்ள பாலை, முதிரை, கருங்காலி போன்ற பெறுமதியான மரங்கள் அழிக்கப்படுவதாக இருந்தால் நிலஅளவைத் திணைக்களம், வனஇலாகா, பிரதேச செயலாளர், சுற்றாடல் அமைச்சு அதிகாரிகள் ஆகியோரிடம் முறையான அனுமதி பெறவேண்டும்.


அப்படி இருக்கையில், இங்கு அவ் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வெறுமனே சட்டவலுவற்ற யப்பான் உறுதியை வைத்துக் கொண்டு அனுமதி வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது.


இது தொடர்பாக கடந்த 21ம் தேதி மாவட்ட வன இலாகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது, காடழிக்கும் தனிநபரிடம் யப்பான் உறுதி இருப்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இவ்வாறு அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதிலும், திருப்திகரமாக இல்லை.இதனால் இக் காடழிப்புக்கு மாவட்ட வனஇலகா துணைபோகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இக்காடழிப்பை தடுத்து நிறுத்த உடன்நடவடிக்கை எடுக்குமாறு, சுற்றாடல் அமைச்சரையும் தொலை நகல் மூலம் கேட்டிருக்கின்றேன்.


இது தவிர, ஏற்கனவே வன இலாகாவின் உத்தரவு பெற்று நடத்தப்பட்டு வரும் மரக்காலைகளின் உரிமையாளர்களை வவுனியா வன இலாகா உத்தியோகஸ்தர்கள் இலஞ்சம் கேட்டு பயமுறுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன.சில நாட்களுக்கு முன் ஓமந்தையில் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாயும், வவுனியா நகரில் ஒருவரிடம் இருபதாயிரம் ரூபாயும் வன இலாகா உத்தியோகஸ்தர்கள் இலஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தொலைபேசியில் வவுனியா மாவட்ட வனஇலகா உத்தியோகஸ்தரிடம் வினவியபோது அவர் எனக்கு அளித்த பதில் திருப்தியாக அமையவில்லை.


மக்கள் பிரதிநிதியாகிய என்னுடன் அவர்கள் உரையாடிய போது நடந்து கொண்ட விதம், என்னை அவமதிப்பதாக இருந்தது. மக்கள் பிரதிநிதியாகிய என்னுடனேயே இவ்வாறு நடந்து கொள்ளும் இவர்கள், சாதாரண மக்களுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுகிறது. இவ் விடயம் தொடர்பில் வனஇலாகா அதிகாரியால் கடிதம் மூலம் எனக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அது தனிச்சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ளது.


வட மாகாண சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் ஒரு பிரதேசத்தில் உள்ள ஒரு காரியாலயம், அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான என்னுடன் தனிச் சிங்களத்தில் தொடர்பு கொள்ளும் போது, பொதுமக்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.


மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதாக அரசும், அமைச்சர்களும் கூறி வரும் நிலையில், வனஇலகா அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வது அரசின் கபடதனத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger