Home » , , , , , , » பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளை விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளை விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு

Written By Namnilam on Tuesday, February 25, 2014 | 2:43 PM

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் 2014ம் வருடத்திற்கான செயற்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் இதுவரைகால நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அரச தகவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


5230


இதன்போது, நாளைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய கைப்பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் தேசிய கைப்பணியாளர்களது கைப்பணித்துறை சார்ந்த உற்பத்திகளை மாகாண மற்றும் தேசிய ரீதியில் கண்காட்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 334 கைப்பணியாளர்களுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது தலைமையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக நாடளாவிய ரீதியில், கைப்பணி உற்பத்திக் கிராமங்களை உருவாக்குதல் மற்றும் பலப்படுத்தல் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 100 மில்லியன் ரூபா நிதி திறைசேரி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் மாசியப்பிட்டி, மட்டக்களப்பில் தாழங்குடா உட்பட நாட்டின் ஏனைய வளம் சார் பகுதிகளில் பல்வேறு கைப்பணி உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம், அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசு இரு கைப்பணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் கிராமங்களை உருவாக்க முன்வந்துள்ளது. இதில் ஒரு கிராமம் யாழ். கைதடியிலும், இரண்டாவது கிராமம் அம்பை. காவன்திஸ்ஸபுரவிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.


தேசிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேலும் பலப்படுத்தும் வகையில், அவர்களுக்கான மூலப்பொருட்களை இலகுவாகவும், நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக,


தற்போது செம்பு, ஈயம், பித்தளை, அலுமினியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் ஏற்றுமதிகள் தடை செய்யப்பட்டு, அவை இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.


அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 18 கைத்தொழில் பேட்டைகளின் மேம்பாடுகள் தொடர்பில் அதிக அவதானங்களை செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 305 மில்லியன் ரூபா நிதியினை பெற்று, அப்பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.


அதேநேரம், தற்போது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களினது நிதி உதவிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமான வசதிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன.


வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளை தரமுயர்த்துதல் மற்றும் விரிவாக்கல் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உந்து சக்தியாக இந்திய அரசாங்கம் அமைச்சர் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, புதிய இயந்திரங்களை குருநகர் வலை உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதேபோல் லுணுவில மற்றும் வீரவில நிறுவனங்களும் தற்போது பலப்படுத்தப்பட்டு வருகின்றன.


பனை மற்றும் கித்துள் சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்துறை சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள், பாதுகாப்பு அங்கிகள், தொழிற்துறையை உறுதிபடுத்துவதற்கான அடையாள அட்டைகள், காப்புறுதி வசதிகள் என்பன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இவ் உற்பத்திகளின் சந்தை வாய்ப்பு வசதிகளும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


இன்றைய நிகழ்வில், பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, அமைச்சின் செயலார் சிவஞானசோதி, அமைச்சின் ஆலோசகர் ஜெகராசசிங்கம், மேலதிக மற்றும் துணைச்செயலாளர்கள் நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சு அதிகாரிகள் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


52335232 (1)

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger