Home » , , » இரணைமடு விவகாரம்: சம்பந்தன் – விவசாயிகள் சந்திப்பு

இரணைமடு விவகாரம்: சம்பந்தன் – விவசாயிகள் சந்திப்பு

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 2:56 PM

நாம் நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மாகாண அரசும் எம்மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்காது கடன் நிதியைப் பற்றி சிந்திக்குமாக இருப்பின், நாம் இதற்கு எதிராக இடைவிடாது போராட்டங்களை நடத்துவோம். அதுமட்டுமன்றி எமது வாழ்வாதார சீரழிப்புக்கு எதிராக எம்மோடு யார் கை கோர்த்து நிற்கிறார்களோ அவர்களோடு இணைந்து எம் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடன்படுவோம் என்று தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.


sampanthan


நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் விவசாயிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.


அந்தச் சந்திப்பின் போது விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சந்திப்பின் நிறைவில் கருத்து வெளியிட்ட சம்பந்தன் விவசாயிகளின், மக்களின் கருத்துக்களை மதித்தே முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றார்.


விவசாயிகள் சம்பந்தனிடம் கையளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,


கௌரவ இரா.சம்பந்தன் – பா.உ. 
தலைவர், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.


இரணைமடு – யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம்


01. 1992ம் வருட நீர்ப்பதிவின் படி 5,645 பங்காளர்களே உள்ளார்கள். 10,000க்கும் மேற்பட்ட பங்காளர்கள் (குடும்பங்கள்) சட்டப்பூர்வமாக பதியப்பட வேண்டியவர்கள். இப்பதிவு இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை.


02. கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 15,000 வரையான ஏக்கர்கள் அரசால் வழங்கப்பட்டு வாய்க்கால்கள் அமைக்கப்பட்ட காணிகள் உட்பட எவைக்கும் இதுவரை நீர்வழங்க எதுவித நடவடிக்கையும் இல்லை. (உதாரணம்: குமரபுரம், காஞ்சிபுரம், பெரியகுளம், உடுப்பாற்றங்கண்டல்.)


03. 15,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் திட்டமிடப்பட்டு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இம்மக்கள் இடப்பெயர்வுகளையும் சந்திக்கும் நிலை உருவாகும். (ஆனால் எம்சார்ந்த ஆய்வு ‘ ஊ’ தரம்.)


04. இத்திட்ட அறிக்கையில் விவசாய சமூகத்திற்கு எதுவித பாதிப்பும் இல்லை என முன்மொழியப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விவசாய சமூகத்திற்கு இவர்கள் சார்ந்த அமைப்புக்களின் ஆலோசனைகள் இன்றி இவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செய்யப்பட்டது ஒப்பந்தமா? புரிந்துணர்வு உடன்படிக்கையா? ஏன் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது? ( அதில் விவசாயிகளுக்கு என்ன பாத்திரம்? வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது எப்போது?)


05. சிறு போக நெற்செய்கை இல்லாது மாற்றுப்பயிர்ச்செய்கை முன்மொழியப்பட்டு, இதன்மூலம் மீதப்படுத்திய நீரே யாழ்ப்பாணத்திற்கு திட்டமிடப்பட்டு ஒப்பந்தங்ஙகள் செய்துள்ளார்கள். (நெல்வயலில் மாற்றுப் பயிர்ச் செய்கை முடியுமா?)


06. யாழ்ப்பாணத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள நீர் குடிநீருக்கானது மட்டும் அல்ல. யாழ்ப்பாணத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்கான நீர் தான் இதற்கான நீர் யாழ்ப்பாணத்தில் இல்லையா? (யாழ்ப்பாணத்தில்தான் குடிநீர் போத்தல்கள் கூடுதலாகத் தயாரிக்கிறார்கள்- சுவிஸ் மினரல், நல்லூர்)


07. நிபுணர் குழுவின் அறிக்கை எங்கே? தீர்மானங்கள் அறிக்கைக்கு சார்பானதாக எடுக்க வலியுறுத்துகிறோம்.


08. இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளுக்கு விவசாய சமூகம் பாத்திரவாளிகள் அல்ல. நாம் இரண்டு வானொலிகளில் தொடர்ந்து துரோகிகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறோம். நாம் எமது வாழ்விற்காகவே போராடுகிறோம்.


09. எம்மை ஏமாற்றும் நோக்கோடு திட்டத்தை முன்னெடுத்த அதிகாரிகள் தான் செயற்பட்டார்கள் என எண்ணினோம். ஆனால், வட மாகாண அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்மைத் திட்டமிட்டு ஏமாற்ற முயற்சிக்கின்றதா? நாம் தமிழ்த் தேசியத்துக்காகவே உங்களை ஆதரித்தோம். நீங்களும் அவ்வாறே பிரச்சாரம் செய்தீர்கள். தற்போது அபிவிருத்தி பற்றி பேசி ஒரு சமூகத்தின் வாழ்வை சீரழித்து, அபிவிருத்தியின் பேரால் பலகோடி பணத்தை பலர் மடியில் கட்டிக் கொள்வதற்கு வழிவகுக்கின்றீர்களா? உண்மையாக யாழ். மக்களின் நன்னீரில் அக்கறை இருப்பின் பல சிறந்த திட்டங்கள் இருந்தும் அவற்றைக் கைவிட்டு இரணைமடுவைக் கையில் எடுத்து எமது வாழ்வை அழிக்கப் போகிறீர்களா?


10. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 20,000 மில்லியன் ரூபாயில் வெறும் 1,500 மில்லியன் ரூபாயே மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (புனரமைப்புக்கு) ஆனால் இரணைமடுவிலிருந்து நீர் எடுக்காமல் வேறு நீர் மூலத்தில் இருந்து நீர் எடுத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படின், நீர் வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட 18,500 மில்லியன் ரூபா திரும்பாது தானே? மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட 1,500 மில்லியன் ரூபாவை வேறு இடத்தில் இருந்து எடுக்கும் நீர்மூலத்தை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தலாம் தானே? ஏன் பெருந்தொகைப்பணம் திரும்ப போகுது என்று கூறுகிறார்கள்? ஆசிய அபிவிருத்தி வங்கி கூட (நிதி தரும்) எங்கிருந்து நிதி எடுக்க வேண்டும் என்று கூறவில்லையே?!!


11. எமக்கு விவசாயத்துக்கு வேறு நீர் தேவையில்லை. கனகராயன், ஆற்று நீரே போதும். மழைக்காலத்தில் மட்டுமே வரும் மகாவலி நீர் தேவையில்லை. குடிநீருக்குத் தேவையாயின், அனுராதபுரத்தில் இருந்தே பைப் லைனில் நீர் யாழ்ப்பாணத்திற்கு குடிக்க கொண்டு வந்தால் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிற்கும் குடிக்க நீர் வழங்கலாமே.


12. நாம் நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மாகாண அரசும் எம்மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்காது கடன் நிதியைப் பற்றி சிந்திக்குமாக இருப்பின், நாம் இதற்கு எதிராக இடைவிடாது போராட்டங்களை நடத்துவோம். அதுமட்டுமன்றி எமது வாழ்வாதார சீரழிப்புக்கு எதிராக எம்மோடு யார் கை கோர்த்து நிற்கிறார்களோ அவர்களோடு இணைந்து எம் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடன்படுவோம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger