Home » , , , , , » கோபிதாஸ் மர்ம மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கோபிதாஸ் மர்ம மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 7:56 PM

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இம்மரணத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.timthumb


இது குறித்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


“பருத்தித்துறை மந்திகையை பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரித்தானிய பிரஜையுமான இவர் கடந்த 24ம் தேதி திங்கட்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலை மலசல கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டபோது அங்குவைத்து சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


சிறையில் இருந்த காலப்பகுதியில் சித்திரவதைகளால் ஏற்பட்ட உட்காயங்களால் கடுமையான உபாதைகளை அனுபவித்திருக்கின்றார். அவருக்கு சுகயீனம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்காளால் ஏற்பட்ட உட்காயங்களும், அதற்கு உரிய சிகிச்சையளிக்கப்படாமையும், இவருக்கு மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.


அத்துடன் மரணமடைவதற்கு முதல்நாள் தமிழ் சிறைக்கைதிகள் மீது சிறைக் காவலர்களும், சிங்களக் கைதிகளும் கூட்டாக மேற்கொண்ட தாக்குதலில் ஒரு தமிழ் அரசியல்கைதி படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனாலும் இம் மரணம் தொடர்பாகவும், பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


2007ம் ஆண்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர், மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு பின்னரும், நீதிமன்ற விசாரணையின்றி 7 வருடங்களாக சிறையில் இருந்துள்ளார். இவர் ஒரு பிரித்தானிய பிரஜை என்ற வகையில், பிரித்தானிய அரசு அவரது நீண்டகால சிறை பற்றியும், விடுதலை பற்றியும் போதிய அக்கறை எடுத்துச் செயற்பட்டதாக தெரியவில்லை.


தற்போது நிகழ்ந்துள்ள அவரது மர்ம மரணம் தெடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இலங்கை அரசு போலவே தமிழர்கள் விடயத்தில் பிரித்தானிய அரசம் நடந்துகொள்கின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


எற்கனவே சிறைகளில் பல தமிழ் அரசியல் கைதிகளின் கொலைகளும், மர்ம மரணங்களும் நடந்தேறியுள்ளன. அவை பற்றி சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருப்பின், கோபிதாஸின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக இடம்பெறும் இச்சிறை மரணங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இத்தகைய சம்பவங்ளுக்கு சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதன் மூலமுமே இவற்றைத் தடுக்க முடியும்.


தமிழர்கள் என்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறான மிகப் பெரும் அவலங்ளைச் சந்திக்கின்றனர். எனவே, அரசியல் கைதிகளின் நலன்களை பேணுவதும், அவர்களது விடுதலைக்காக செயற்படுவதும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும். நாம் அனைவரும் இக் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படல் வேண்டும்.


கோபிதாஸின் மர்ம மரணம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மரணச் சடங்கில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு கோபிதாஸின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிக்குமாறு வேண்டுகின்றோம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger