Home » , , , , » ஜெனிவாவிற்கு கன்றுக் குட்டிகளை அனுப்ப வேண்டாம் என சங்கரி - சம்பந்தனுக்கு கடிதம்

ஜெனிவாவிற்கு கன்றுக் குட்டிகளை அனுப்ப வேண்டாம் என சங்கரி - சம்பந்தனுக்கு கடிதம்

Written By Namnilam on Friday, February 28, 2014 | 5:42 PM

தமிழர் பிரச்சினையை எடுத்துக்கூற ஜெனிவாவிற்கு கன்றுக் குட்டிகளை அனுப்பி வைக்க வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 


tna.sam-sangari-300x176

அனுபவம்வாய்ந்தவர்களை ஜெனிவாவிற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆனந்த சங்கரி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அனுப்பிய கடிதத்தின் முழு வடிவம் பின்வருமாறு, 

திரு. இரா. சம்பந்தன்
தலைவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 

அன்புள்ள சாம்! 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு தொந்தரவு தருவதற்கு என்னை மன்னிக்கவும். சுயலாபம் கருதி உங்கள் மூலமாகவோ அன்றி உங்கள் ஊடாக வேறுஒருவர் மூலமாகவோ ஏதாவது வியாபாரம் செய்து தனிப்பட்டமுறையில் இலாபமடைய நான் முயற்சிக்கவில்லை. 

கடந்த 27.12.2013 ஆந் திகதி உங்களுக்கு எழுதிய கடிதத்தில் மிகமுதிர்ந்ததமிழ் அரசியல்வாதிகளில் இருவராகிய எம்மீது சந்தர்ப்பம் சூழ்நிலை சிலமுக்கிய பொறுப்புக்களை சுமத்தியுள்ளவேளையில் அப்பாவி மக்களை அநாதரவாக விட்டுவிடமுடியாது. இக்கட்டத்தில் நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் எமது பிரச்சினைகள் எவை என நான் உங்களுக்கு எடுத்துக் காட்டத் தேவையில்லை. 

நான் மீண்டும் உங்களுக்கு கடந்த 31.01.2014இல் எனது முன்னைய கடிதத்தில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்தேன். உங்கள் மீதுபெரும் நம்பிக்கைவைத்து மக்கள் உங்களுக்கு ஆணையைத் தந்துள்ளனர். கடந்த சிலநாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகளே என்னை இந்த மூன்றாவது கடிதத்தை எழுத தூண்டியது. என்னைத் தவிர்த்து தனிமையில் செயற்படுவதாக தீர்மானித்துவிட்டால் நீங்கள் மிக்க அவதானமாக செயற்படவேண்டும் என்றும் இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வை நோக்கிவரும் ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். 

இந்த வேளையில் எமக்கு வேண்டியதும் அதுவே! பிரச்சினைகள் மேலும் மோசமடையாது பார்த்துக் கொள்ளுங்கள். நான் இப்போதும் கூட பொதுநலவாய நாடுகளின் ஒன்று கூடலை எமக்குசாதகமாக பாவிக்க தவறியமையை பெரியதவறாகவே கருதுகிறேன். நீங்களும் அவ்வாறே எண்ணுவீர்கள் என நான் அறிவேன். இது ஒரு அரிய பொன்னான வாய்ப்பென்றே கருதுகிறேன். 

நாட்டில் பல்வேறு தீமைகளுக்கு காலாக விளங்கும் இனப்பிரச்சினையைத் தவிர்த்து தனிய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி மட்டும்தான் புலம்பெயர்ந்தோர் லண்டனில் பிரதம மந்திரிக்கு விளக்கியிருப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். வேறு எந்த நாட்டைவிட பிரித்தானியாதான் இனப்பிரச்சினைபற்றி பொதுநலவாயநாட்டுத் தலைவர்களுக்கு கூட்டத்தில் பேசியிருக்க வேண்டும். 

ஏனெனில் இலங்கைக்கு சுதந்திரத்தையும் ஓர் அரசியல் யாப்பையும் அந்த யாப்பினை உருவாக்கிய சோல்பரிபிரபுவை எமது நாட்டின் முதல் தேசாதிபதியாக தந்துதவியது. சோல்பரி அரசியல் யாப்பை கைவிட்டு வேறு இரு அரசியல் யாப்புக்களை சொற்ப இடைவெளிக்குள் விரைவாக அமுல்படுத்தியமையே சிறுபான்மையினரின் கஷ்டங்களுக்கு காலாக அமைந்தமையால் பிரித்தானிய அரசு சம்பந்தப்பட வேண்டிய நிலை முக்கியமாகத் தோன்றுகிறது. 

பொதுநலவாயநாடுகளும் அந்த ஸ்தானத்தை உருவாக்கிய பிரித்தானியாவும் இவ்விடயத்தில் தலையிட முடியாதெனியல் வேறு யாரால் தலையிடமுடியும்? பிரித்தானியாவே இந்த 54 நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்ததென்பதை மறந்து விடமுடியாது. மேலும் தான் தயாரித்துத் தந்த அரசியல் சாசனம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டபோது சோல்பரி பிரபு வாய்மூடி மௌனியாக இருக்க பிரித்தானிய அரசம் மௌனித்திருந்தது. 

பொதுநலவாயநாட்டுத் தலைவர்களின் கூட்டம் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டபடி கொழும்பில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆந் திகதி தொடக்கம் 17ஆந் திகதி வரை நடைபெறும் என்ற முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நீண்டகாலமாக நிலைத்துநிற்கும் இனப்பிரச்சினை விவாதத்துக்கு எடுக்கக்கூடிய மேடை ஒன்றை அமைக்கும் பொன்னான ஓர் வாய்ப்பு உருவாகிறதாக நம்பியிருந்தேன். 

எம்மை நாடிவந்த நல்ல இரு வாய்ப்புக்களை துரதிர்ஷ்டவசமாக இழந்து நிற்கிறோம். இவ்விரண்டிலும் முன்னையது 2008 ஆம் ஆண்டு நம்நாட்டில் நடந்தேறிய சார்க் உச்சி மகாநாடாகும். அந்தநேரம் 2008.7.26 திகதியிட்டு இரு கடிதங்கள் எழுதி ஒன்றை மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றொன்றை விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சார்க் நாட்டுத் தலைவர்களின் நல்லெண்ணத்தை உபயோகித்து இனப்பிரச்சினைக்கோர் தீர்வுகாணும்படி வேண்டியிருந்தேன். 

17கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நாடுகளின் தலைவர்கள் அன்று வந்திருந்தனர். உலகில் மூன்றில் இரண்டு பங்காக உள்ள 30கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 நாடுகளின் தலைவர்கள் எமது நாட்டில் கூடியவேளை இனப்பிரச்சினை சம்பந்தமான பிரேரணையை ஏற்கும் அதிகாரம் பொதுநலவாயநாட்டு அமைப்புக்கு இருந்தும் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கத் தவறியமை நாட்டுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு எனக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித நடவடிக்கையும் எடுக்காமையால், இப்பிரச்சினையில் பிரித்தானிய அரசை ஈடுபட வைக்க நிர்ப்பந்திக்கப்படுத்தப்பட்டேன். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடந்தகாலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளிநாட்டுக் குழுக்களுக்கு இனப்பிரச்சினை சம்பந்தமாக களநிலைமையை விளக்கப்படுத்துவதுண்டு. அன்றேல் சுயவிளக்கம் கொடுக்கக் கூடியநம்மால் தயாரிக்கப்பட்ட பத்திரங்களைக் கையளிப்போம். 

ஆனால் சத்திரசிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த உங்களை சந்திக்க நான் ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு சென்னை சென்று வந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழு ஆதரவுகொடுப்பதாக உறுதிபூண்டு வட கிழக்கு மாகாணங்களில் நடந்தேறிய இரு உள்ளுராட்சித் தேர்தல்களிலும், மாகாணசபைத் தேர்தலிலும் தீவிரபிரச்சாரத்தில் வட கிழக்கில் ஈடுபட்டோம். 

ஆனால் உங்களைச் சந்தித்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் இன்றுவரை எதுவித ஆலோசனைகளைப் பெறவோ ஆலோசனை கூறவோ அன்றி உள்ளுரிலும் சரி வெளிநாட்டவர் வரும்போதும் சரி அன்றி எவருடனும் பேசுவதற்கும் அழைத்துச் செல்வது இல்லை. பிரித்தானியப் பிரதமர் இலங்கை வந்து கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்தபோது கூட என்னையும் அழைத்துச் செல்லாதமை எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. 

இந்த சந்தர்ப்பத்தில் வேறுவழியின்றி முன்னர் நான் கடைப்பிடித்துவந்த முறையாகிய களநிலைமையைப் பற்றித் தெளிவுபடுத்தக் கூடியவிதமாக விஷேஷமாகத் தயாரிக்கப்பட்ட பத்திரங்களை இத்தகையோருக்கும் வேறு தூதுக்குழுக்களுக்கும் கையளிக்கும் முறையை ஆரம்பிக்க நேர்ந்தது. இச்சந்தர்ப்பத்தில்கூட சில பத்திரங்களை பிரித்தானியத் தூதரகமூடாக பிரித்தானியப் பிரதமருக்கு அனுப்பிவைக்க நேர்ந்தது. 

சில சமயம் அவை அவருக்கு நேரத்திற்கு கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். அல்லது ஒருவேளை முன்னறிவித்தலின்றி இப்பிரேரணையை எடுக்க போதிய அவகாசம் இல்லாது போயிருக்கலாம். இருப்பினும் இப்பத்திரங்களின் பிரதிகள் இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர்களுக்கும் ஏனைய தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 

ஜெனிவாவுக்கு ஒரு குழுவை அனுப்பும் விடயத்தில் நான் எனது கருத்தைக் கூறவிரும்புகிறேன். கடந்த வருடம் இது சம்பந்தமாக ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக விவாதித்து ஜெனிவா செல்வதில்லை என நீங்கள் எடுத்த முடிவை 3.3.2012 தினக்குரல் பத்திரிகை வெளியிட்டிருந்தது. ஆனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமாக கூறியவற்றைக் கீழே தந்துள்ளேன். 

முதலாவதாக திரு.சேனாதிராசா ஓர் பத்திரிகையில் சர்வதேச சமூகம் கொடுத்த ஆலோசனையின் படியே ஜெனீவா செல்லவில்லை என்றும் அதேதினம் வேறு ஒருபத்திரிகையில் தாம் கலந்துகொள்ளாமை அனுமதி கிடையாதென்பதாலேயே எனவும் கூறியிருந்தார். திரு. சுமந்திரன் அவர்கள் தாம் போயிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு இரத்தாக்கப்பட்டுவிடும் என்றும் ஏற்கனவே நடந்து முடிந்த 11 தொடர்களுக்குப் போகாததைப் பற்றிகேள்வி எழுப்பாதோர் இப்போதுமட்டும் ஏன் கேட்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். 

அதைத் தொடர்ந்து திரு. சுமந்திரன், திரு. சிறீதரன் ஆகிய இருவரும் ஜெனீவா போகாது போனால் நாம் துரோகிகளா? அங்கே போய் என்னத்தைச் சாதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். ஆயுதப் படையினரும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தக் கோரச் சம்பவம் புலிகள் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குப் போக அனுமதிக்காதமையால் ஏற்பட்டதென்றும் அத்துமீறல்களுக்கு அரசபடைகளும், விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளதோடு வடக்கிலும், தெற்கிலும் கிழக்கிலும் அரசுக் கெதிராக ஆயுதம் தூக்கியவர்கள் விரக்தியடைந்த வேலையற்ற இளைஞர்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

தயவுசெய்து இதற்கு முந்திய பந்தியை ஒரு தடவை மீண்டும் படித்து இத்தகைய பிரமுகர்களை ஜெனிவாவுக்கு அனுப்புவதால் ஏதேனும் பிரயோசனம் ஏற்படுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இது எதிர்பார்த்த பலனுக்கு முரணானதாகவே அமையுமென நான் விசுவாசமாகக் கருதுகிறேன். 

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நாணயத்தை இழப்பதோடு விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் இத்தகைய தலைவர்களின் உளறல்களினால் சில ஆபத்துக்களை எதிர்நோக்க வாய்ப்புண்டு. சிலபிரச்சினைகள் பற்றி நடவடிக்கை எடுக்கும்போது கன்றுக் குட்டிகளிடம் விட்டுவிடாது நீங்களே தலையிட்டு நடவடிக்கை எடுங்கள்! ஏனெனில் அவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு புகழ் சேர்க்க மிகவும் உற்சாகமாக முன்னெடுத்துச் செயற்படுகிறார்கள். 

ஏற்கனவே ஒருநபர் 19 நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டதாக அறிக்கை விட்டுள்ளார். இது நடந்திருக்கக்கூடியதல்ல. இவரே தான் கடந்தவருடம் 3மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்து எடுத்த முயற்சியின் பயனே அமெரிக்கத் தீர்மானம் மனித உரிமைகள் சபைக்கு வரக் காரணமாக இருந்ததென இந்தியா சென்று புகழ்பாடியுள்ளார். 

தயவுசெய்து நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயற்படக்கூடிய ஒரு குழுவினரையே மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க ஜெனிவாவுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்விடயம் மிக வேதனையைத் தருகிறது. ஜெனிவா விஜயத்தின்போது அனுபவமற்றவர்களிடம் கையளியாது நீங்களே அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger