Home » , , , » தமிழரசுக் கட்சிக்கு பிரதேச கிளைகள் அங்குரார்பணம்!

தமிழரசுக் கட்சிக்கு பிரதேச கிளைகள் அங்குரார்பணம்!

Written By Namnilam on Monday, February 24, 2014 | 5:10 PM

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச கிளைகளை அங்குரார்பணம் செய்யும் கூட்டமொன்று பூநகரி பிரதேசத்தின் குமுழ முனையில், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் ஸ்ரீ ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.


5217


இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுசெயலாளரும், பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, யாழ். மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவரும் பளை பிரதேசசபையின் உறுப்பினருமான சுரேன்,


5225


5224


கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், ஜெயபுரம் பிரதேசகட்சி அமைப்பாளர் மத்தியூஸ், கிராஞ்சி பிரதேச அமைப்பாளர் கோணேஸ் கிளிநொச்சி கரைச்சி பிரதேச அமைப்பாளரும், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், பா.உறுப்பினர் மாவை. சேனாதிராசாவின் செயலாளர் பிருந்தாபன் உட்பட கட்சி ஆதரரவாளர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


இதில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய மாவை சேனாதிராசா, உங்களோடு கலந்து இருந்து கருத்துக்களை பரிமாறக் கொள்ளக்கூடிய இச்சந்தர்ப்பத்துக்கு நான் நன்றி கூறுகின்றேன். எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்தி வருகின்ற அரசாங்கத்தோடு பேசிப் பேசி பயனற்றுப்போன நிலையில், இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவு நிலையுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம்.


ஏனெனில், போர் முடிந்த பின்பு வந்த சகல தேர்தல்களிலும் எமது மக்கள் தங்கள் நிலையை ஜனநாயக வழியில் பலமுறை சொன்னபோதும், இன்றைக்கு இருக்கிற ஜனாதிபதியும், அவர்தம் குடும்பமும் தமிழர் பிரச்சினையை ஒரு பொருட்டாக கருதாமல், எப்படி தமிழரின் ஜனநாயக உரிமைகளையும் பறித்தெடுக்கலாம் என சிந்தித்து இன்றும் வடக்கு கிழக்கிலே ஒரு இராணுவ கெடுபிடி ஆட்சியை நடாத்திவருகின்றது. இப்படி இருக்கையில் நாம் என்ன செய்யமுடியும்.


நாம் எமக்கு கனிந்துவருகின்ற சர்வதேசசூழலை பற்றிக்கொள்ளாமல் இருக்கமுடியுமா. இல்லை, உங்களுக்கு தெரியும், இன்றைக்கு நாம் கைப்பற்றி இருக்கின்ற வட மாகாண சபையின் அதிகாரங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதினெட்டாவது சீர்திருத்தத்தின் மூலம் திவிநெகும என்ற ஒரு கயமைத்தனமான திட்டங்களை வகுத்து, தனது தம்பியான பசில் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டு வந்து செய்திருக்கும் அடாவடித்தனங்களை இந்த மக்களும், உலகமும் அறியும்.


தமக்கு சார்பாக தீர்ப்பை எழுதவில்லை என்பதற்காக இலங்கையின் நீதி அரசரான ஷிராணி பண்டாரநாயக்காவை தூக்கி எறிந்து தன்னுடைய அநீதி ஆட்சியை உலகத்திற்கு இந்த அரசாங்கம் உணர்த்தி இருக்கின்றது. இன்றைக்கு உலகம் இலங்கை அரசாங்கத்தை மிக உன்னிப்பாக பார்க்கின்றது. உலகத்தின் பெருந்தலைவர்கள் மனித உரிமை காக்கும் உயர்பீட பிரதிநிதிகள் இங்கே தமிழர்களை பார்க்க வருகின்றார்கள். எனவே ,இனி எதையும் யாரும் இங்கே மறைக்கமுடியாது.


இன்றைக்கு தருஸ்மன் விசாரணை அறிக்கையில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இப்போது விசுவரூபம் எடுத்துள்ளன. எப்போதும் தர்மத்துக்கு உலகம் தலைசாய்த்துதான் ஆகவேண்டும். அதுதான் இன்று நடக்கின்றது.


நான் இன்றும் பார்த்தேன் செம்மன்குன்று பகுதியில் இராணுவத்தினர் சீருடையோடு மக்கள் குழந்தைகள் வாழுகின்ற குடியிருப்புக்குள் நின்று துப்பாக்கி சூடு நடத்தி பயிற்சி எடுக்கின்றார்கள். இதை நான் கண்ணால் கண்டேன். இங்கே என்ன நடக்கின்றது. கிராமப்புறங்களில் அப்படியே இராணுவ அச்சுறுத்தல் அடாவடித்தனங்கள் தொடர்கின்றது. இதை நாம் சர்வதேசத்துக்கு நிச்சயம் சொல்வோம். இங்கே எதற்கு துப்பாக்கி வேட்டுக்குள். இங்கே பல பிரச்சினைகளை கேள்விப்பட்டேன்.


பொன்னாவெளியில் உள்ள வளங்களை அதாவது, கற்களை நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தோண்டி அதை வேறு வேறு இடங்களுக்கு கொண்டு பண முதலைகளுக்கு தீனி போடுவதற்கு வேலைகள் நடக்கின்றது. இது தொடர்பாக இந்த மாவட்டத்தை நிர்வகிக்கின்ற அசர அதிகாரிகளும், அசமந்தமாக அல்லது கண்டும்காணாததுமாக இருப்பதாக மக்கள் முறையிடுகின்றார்கள். இங்கு பலவிதமான முறையில் எமது வாழ்வை சீரழிக்க நடவடிக்கைள் அரங்கேறுகின்றன.


அங்கு மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறபெற இராணுவத்துக்கும், பொலிசுக்கும் பணம் சலுகைகள் எங்களுக்கு என்ன நடக்கின்றது. இராணுவத்தில் பெண்களை சேர்க்க கட்டாயபடுத்தல், கருத்தடை செய்வித்தல், இனக்கலப்பு செய்தல் இதுதான் எங்களுக்கு நடக்கின்றது. எனவே எங்கள் பெருமைக்குரிய கொள்கை குன்றா மக்களே! எங்களுக்கான காலம் நிச்சயம் கனியும்! அதுவரை ஒற்றுமையும் ஜனநாயகவழியிலான போராட்டங்களும் அவசியம். நாம் அதில் முன்நிற்போம். எங்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவோம் எனக் குறிப்பிட்டார்.


கிளிநொச்சி பூநகரியின் முழங்காவில் பிரதேசத்துக்கான இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில், தலைவராக கோவிந்தபிள்ளை அரியநாயகம் பொருளாளர்-பத்மசேனன் லிடான்ரியுடர் துணைதலைவர் அருணாசலம் கேதீஸ்வரன், செயலாளர் தனபாலன், குகேந்திரன் துணைச்செயலாளர் வல்லிபுரம் ஸ்ரீபாஸ்கரன் மற்றும் பிரதேச உறுப்பினர்களாக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் -முழங்காவில் திருமதி புவனராசா பார்வனம்மா- குமழமுனை வைரமுத்து தனபாலசிங்கம்-நாகபடுவான் இராஜரட்ணம் கேதீஸ்வரன்- கிராஞ்சி நாகநாதி குணசேகரம்- வேரவில் விஜயரட்ணம் துஜிகரன்- நாச்சிக்குடா சூசைநாதன் கிறிஸ்துராஜன்- இரணைமாதாநகர் தளையசிங்கம் விஜயசங்கர். அன்புபுரம் என தமிழரசுக்கட்சி நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger