Home » , , , , , , , , » மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை மேற்குப் பிரதேச சபையை இரண்டு பிரதேச சபைகளாக பிரிப்பதற்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் முன் மொழிவு

மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை மேற்குப் பிரதேச சபையை இரண்டு பிரதேச சபைகளாக பிரிப்பதற்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் முன் மொழிவு

Written By Namnilam on Saturday, March 1, 2014 | 3:16 PM

மன்னார் மாவட்டம் 05 பிரதேச செயலகங்களைக் கொண்ட நிர்வாக மாவட்டமாகும். இங்கு இவ் ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி 01 நகர சபையும், 04 பிரதேச சபைகளும் இயங்கி வருகின்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், மாந்தை மேற்கு எனும் பிரதேச சபை மடு, மாந்தை மேற்கு என்னும் இரு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய தனிப் பிரதேச சபையாக இயங்கி வருகின்றது.


deneeswaran


மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவை எடுத்துக்கொண்டால் 36 கிராம சேவகர் பிரிவுகளையும், 126 கிராமங்களையும், 24,580 சனத்தொகையையும், 658.9 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பளவையும், வீதியை எடுத்துக்கொண்டால் அண்ணளவாக 300 கிலோ மீட்டரையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப் பிரதேச சபையின் பிரதான காரியாலயத்திற்கும், மன்னார், கிளிநொச்சி எல்லையில் உள்ள வெள்ளாங்குளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் 36 கிலோ மீட்டராகும்.


இதேபோன்று மடுப் பிரதேச செயலகப்பிரிவை எடுத்துக்கொண்டால் 17 கிராம சேவையாளர் பிரிவுகளையும், 76 கிராமங்களையும், 12,332 மக்கள் தொகையையும், 658.90 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பளவையும், சுமார் 150 கிலோ மீட்டர் வீதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் மன்னார் வவுனியா எல்லையில் அமைந்துள்ள பரசன்குளத்திலிருந்து பிரதான பிரதேச சபைக் காரியாலயத்திற்குள்ள தூரம் 90 கிலோ மீட்டர் ஆகும்.


எனவே, பரசன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் அலுவலக நிமித்தம் பிரதேச காரியாலயத்திற்கு வரவேண்டுமானால், 90 கிலோ மீட்டர் வரவேண்டியது மட்டுமல்லாது, அந்தக் கிராமத்தின் அமைவிடம் பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட (அதாவது நாளொன்றுக்கு 01 தடவை காலை, மாலை) சேவை மட்டுமே நடைபெறும் பிரதேசமாகும்.


அத்துடன், அலுவலகர்களுக்கும் இவ்வாறான தூரப் பிரதேசத்திற்கு சென்று சேவையாற்றுவதென்பது மிகவும் கடினமான காரியமாகும். இதன் காரணமாகத்தான் இவை போன்ற தூரப் பிரதேசங்கள் அபிவிருத்தியின்றியும், கவனிப்பின்றியும் கைவிடப்பட்டுள்ளன. மடுப் பிரதேசம் முற்று முழுதாக காடுகளால் சூழப்பட்ட பிரதேசம், பெரும்பாலான வீதிகள் கிறவல் வீதிகளாகவும், குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன.


எனவே, இம்மக்களின் நல் வாழ்வுக்கும், இப் பிரதேசங்களின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கும் வசதியாக இந்தப் பிரதேசங்களை ஏனைய பிரதேசங்களில் உள்ளது போன்று 01 பிரதேச செயலகத்திற்கு 01 பிரதேச சபை வீதம், தனித் தனி பிரதேச சபை நிர்வாகங்களாக பிரித்து அவற்றின் மேம்பாட்டிற்கு வழியமைக்க இம் முன் மொழிவை அவையில் சமர்ப்பிக்கின்றேன்.


பா.டெனிஸ்வரன்
அமைச்சர்
மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவருத்தி
மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு (வ.மா)

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger