ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 29). இவருக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியில் உள்ள மேலக்காரன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (29) கூலி தொழிலாளி. மணிகண்டனுக்கும், அன்னலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததால் அன்னலட்சுமியை அவரது கணவர் கண்டித்தார். இதனால் 3 வருடத்திற்கு முன்பு அன்னலட்சுமி தனது கள்ளக்காதலன் மணிகண்டனுடன் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தார். கோட்டயம் பகுதியில் வாடகை வீடு எடுத்து கள்ளக்காதல் ஜோடி குடும்பம் நடத்தி வந்தது.
இந்த நிலையில் மணிகண்டனுக்கும் அன்னலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை பிரிந்து ராமநாதபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அன்னலட்சுமி சென்று விட்டார். அங்கு அவர் கூலி வேலை செய்து வாழ்க்கை ஓட்டி வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூலி வேலைக்காக குமுளிக்கு சென்றனர். அவர்களுடன் சேர்ந்து அன்னலட்சுமியும் குமுளிக்கு சென்றார்.
அங்கு தங்கியிருந்து அவர் வேலை செய்து வந்தார். அப்போது கள்ளக்காதலன் மணிகண்டன் அவரை பார்த்து விட்டார். உடனே அவர் அன்னலட்சுமியை மீண்டும் தன்னுடன் வந்து வசிக்கும்படி கூறினார்.
ஆனால் அதற்கு அன்னலட்சுமி மறுத்து விட்டார். ஆனாலும் மணிகண்டன் அவர் வேலைக்கு செல்லும்போது எல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் வரும்படி கூறி தொந்தரவு செய்து வந்தார். நேற்று அன்னலட்சுமி குமுளி போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மணிகண்டன் தன்னிடம் இருந்த கத்தியால் அன்னலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அன்னலட்சுமியின் கழுத்தை அறுத்து மணிகண்டன் கொலை செய்தார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாடும் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலையை பார்த்த சில ஆட்டோ டிரைவர்கள் ஓடி சென்று மணிகண்டனை மடக்கி பிடித்தனர். பிறகு அவரை குமுளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment