திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று திறந்த வேனில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். செங்குன்றத்தில் அவர் பேசியபோது கூறியதாவது,
செங்குன்றம் வந்தாலே எனக்கு பழைய ஞாபகம் வரும். ஏனென்றால் இங்கு அரிசி ஆலைகள் அதிகம். இந்த ஆட்சியிலே தொழில் வளம் நலிவடைந்துள்ளது. செங்குன்றத்தில் இறால் மீன் உணவு ருசியாக இருக்கும். நான் பலமுறை சாப்பிட்டுள்ளேன்.
இங்கு பெரிய பேருந்துநிலையம் உள்ளது. ஆனால் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை கிடையாது. இந்த பரிதாப நிலை பல வருடங்களாக நீடித்து வருகிறது. செங்குன்றத்துக்கு அருகில் உள்ள பழவேற்காட்டில் மீனவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்கின்றனர். அதை இந்த அரசால் தடுக்க முடியவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். பால் பாக்கெட் கொடுக்கும்போதும் நாளிதழ்கள் கொடுக்கும்போதும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என நினைத்தால் அவர்கள் போனை எடுப்பது இல்லை. நான் சாதி மதம் பார்ப்பதில்லை. அதனால் என்ன பயன் என்பதை உணர்ந்தவன். தமிழக போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வைத்துள்ளார். ஆளும் கட்சி ஆதரவாளர்களாக போலீசார் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையெல்லாம் மாற்றப்பட வேண்டும்.
நரேந்திரமோடி பிரதமரானால் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பார். கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி வருகிறார். டெசோ இயக்கம் வாஜ்பாய் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். எங்கு பார்த்தாலும் பாரதீய ஜனதா கூட்டணி அலை வீசுவதை பார்த்தால் மோடி பிரதமராவது உறுதியாகி விட்டது. திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜுக்கு 'முரசு' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Post a Comment