பாராளுமன்ற தேர்தலுக்கான 9 கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 7–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழ் நாடு உள்பட 12 மாநிலங்களில் வருகிற 24–ந்தேதி (வியாழக்கிழமை) 6–வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 24–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, இடது சாரிகள் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக 40 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் சார்பாக ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ்நாட்டுக்கு 4 தடவை வந்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, கன்னியாகுமரி வந்து பிரசாரம் செய்தார். இதையடுத்து இன்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார்கள்.
தலைவர்களின் முற்றுகை காரணமாக 40 தொகுதிகளிலும் உச்சக் கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்–நடிகைகள் செய்யும் பிரசாரமும் களை கட்டியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் கடைசி நேரத்தில் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும். எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது.
நாளை மாலை 6 மணிக்கு பிறகு தொலைக்காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல எஸ்.எம்.எஸ், இணையத்தளம் வழியாகவும் ஆதரவு திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு பிறகு வாக்காளர்களை கவரும் வகையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தினால் அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment