Home » , , , » இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது, பா.கஜதீபன்

இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது, பா.கஜதீபன்

Written By Namnilam on Sunday, April 20, 2014 | 7:10 AM

தாயக தமிழ் இளையோர்களுக்கு வேலை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களைத் தள்ளி, இன்றைய ஆளும் மத்திய அரசு, அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி மூளைச்சலவை செய்து வேறு சிவில் வேலை வாய்ப்புக்களை வழங்காமல், இராணுவத்திற்கு உள்ளீர்க்கும் படுபயங்கரமான ஒரு நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட ரீதியில், தமிழர் வாழும் பிரதேசமெங்கும் அரங்கேற்றி வருகிறது.


இந்த அபாயகரமான அரசின் சதிவலைக்குள் எந்தவொரு உண்மையான தமிழ் இளையோர்கள் எவ்விதத்திலும் சிக்கி விடாமல் விழிப்புடன் உண்மை நிலையை உணர்ந்து செயற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.


கைதடி மத்தி குமார நகர் சனசமூக நிலைய, நிறைமதி முன்பள்ளியின் விளையாட்டு விழா நேற்று 19.04.2014 சனிக்கிழமையன்று கைதடியில் திருமதி.வ.ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாங்கள் நின்று கொண்டிருக்கும், இந்த சனசமூக நிலைய திறப்பு விழாவில் கடந்த வருடம் நான் கலந்து கொண்டேன். அப்போது இந்த சனசமூக நிலையத்துக்கு மறைந்த, தென்மராட்சி மண்ணைச் சேர்ந்த, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாமனிதர் ந.ரவிராஜ் அவர்கள் அடிக்கல நாட்டியிருந்தமை பற்றி அறிந்தேன்.


அவருடன் இணைந்து செயற்பட்ட இந்த ஊரின் முக்கியஸ்தர்கள் தான் இந்த சனசமூக நிலையத்தின் நிர்வாகிகளாக உள்ளனர். இந்நிலைமையானது இன்று இந்த முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறார்கள், நாளை நல்ல தேசிய் உணர்வாளர்களாக, மொழிப்பற்றாளர்களாக வருவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லாமல் செய்து விட்டது.


ஆனால் இப்படியான சமூகங்களை திசைமாற்றி, சீரழித்து இப்படியான இனப்பற்றுள்ள, தமிழ்த் தேசியப் பற்றுள்ள இளையோர்களை வேலைவாய்ப்பு எனும் மாயையின் கீழ் இனத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு முடுக்கி விட்டுள்ளது.


ஆனால் தனிப்பட்ட தேவைகளை மனதிற்கொண்டு அல்லது அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு எடுபட்டு யாராவது இவ்வாறான வரலாற்றுத் துரோகத்தை இழைப்பார்களேயானால் அவர்களை ஒரு பொழுதும் எந்தவொரு தமிழ் மகனும் ஏற்றுக்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டான்.


ஆகவே எமது இளையோர்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை விளங்கிக் கொள்வதுடன், ஏனைய நண்பர்களுக்கும் விளக்கி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க ஒன்றுதிரள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஜெ.சிற்சபாநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் இ.திருஞானசிவம், மற்றும் சனசமூக நிலைய செயலாளர் வ.ரவீந்திரன், மற்றும் ஊர் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger