வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப்பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி தெனாலிராமன் வரை பல தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும்கூட ஏதோ ஒரு காரணத்தை கூறி எதிர்ப்பை கிளப்பி தமிழ் கலையையும், கலைஞர்களையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
உலக அரசியலில் பெரும் தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து கார்ட்டூன் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரையே கிண்டல் செய்து படம் எடுத்தவர்தான் மகா கலைஞரான சார்லி சாப்லின். அந்த சர்வாதிகாரி ஹிட்லரே கூட அதை அறிந்து சார்லி சாப்லினை குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கவில்லை.
தெனாலிராமன், கிருஷ்ண தேவராயரின் அரசவையில் விகடகவியாக நையாண்டி செய்து, கேலி கிண்டல்கள் மூலமாக அறிவுபூர்வமான கருத்துக்களை கூறியவர். தெனாலிராமனின் செயல்பாடுகள் கோமாளித்தனமாகத்தான் தெரியும். அப்படியொரு தெனாலிராமனை, தெனாலிராமன் என காட்டாமல் அயோத்திராமன் என்றா காட்ட முடியும்.
தெலுங்கு பேசிய தெனாலிராமனை பற்றி சொல்லும்போது ஆங்காங்கே தெலுங்கு வசனங்கள் வரத்தான் செய்யும். அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஒருசாரார் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதை எங்களுக்கு திரையிட்டு காட்டுங்கள் அல்லது நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று சொல்வது நியாயமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
Post a Comment