Home » » வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா ?

வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா ?

Written By Namnilam on Tuesday, April 22, 2014 | 3:14 PM

இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய முகாமாக இருந்ததும், முகமாலை முன்னரங்க நிலைக்கான விநியோகத் தளமாகவும் இருந்து வந்த வரணிப் படைத்தளத்தினிலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


1996ம் ஆண்டு யாழ். குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் வரணியில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து, பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டு 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது.


அன்று முதல் தென்மராட்சிப் பகுதிகளில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் காணமல் போதல்களது மையமாக இப்படைத்தளமே இருந்துவந்தது. குறிப்பாக ஆலயமொன்றில் தங்கியிருந்த எட்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பிலும் இப்படைத்தளமே குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தது.


இந்நிலையில் சுமார் 18 வருடங்களின் பின்னர் குறித்த படைமுகாம் மூடப்பட்டு காணிகள் மற்றும் வீடுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்ட மிருசுவில் பகுதிக்கு இப்படைத்தளம் நகர்த்தப்பட்டுமிருந்தது.


எனினும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வரணிப் படைத்தளம் சுமார் இரண்டு மாதங்களின் பின்னதாக நேற்றே முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தது.


இப்படைத்தளத்தில் கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளினில் கனரக வாகனங்கள் சகிதம் அப்பகுதியினில் பாரிய குழிகள் அகழப்பட்டதுடன், அங்கிருந்து அவசர அவசரமாக அடையாளம் தெரியாத பொருட்கள் அகற்றப்பட்டதாக அயல் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பலத்த சந்தேககங்களை தோற்றுவித்திருந்தது.


குறிப்பாக விடுவிக்கப்பட்ட படைத்தளப்பகுதியினில் காணப்படும் சர்ச்சைக்குரிய பகுதிகளை பார்வையிட்ட மனித நேய செயற்பாட்டு அணி ஒன்று அங்கு காணப்படும் பாரிய குழிகள் அகழப்பட்டு வேறிடங்களிலிருந்து மண் எடுத்துவரப்பட்டு மூடப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தியுமுள்ளது.


ஏற்கனவே வடமராட்சியில் கைவிடப்பட்ட பல்லப்பை படைத்தளத்தில் மனித புதை குழி பற்றி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இம்முகாமிலும் புதைகுழிகள் துப்பராவாக்கப்பட்டிருக்கலாமென மக்களினால் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger