Home » » பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய பஞ்சவர்ணேஸ்வரர்

பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய பஞ்சவர்ணேஸ்வரர்

Written By Namnilam on Sunday, April 20, 2014 | 7:45 AM

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். இறைச் சிந்தையில் நம்பிக்கையற்ற ஒருவன், ஒரு நாள் சிவாலயம் ஒன்றுக்கு செல்லும்படி நேர்ந்தது. அங்கே அவனுக்கு திருநீற்றுப் பிரசாதம் தரப்பட்டது. நீறு என்றால் புனிதம் அன்றோ. “நீறு இல்லா நெற்றி பாழ்’ என்ற சிந்தை கொண்ட அந்நாளில், கோயிலில் வழங்கப்பட்ட திருநீறை உதாசீனம் செய்தான். நெற்றியில் பூணாமல் வீணாக்கினான். இந்தப் பாபம் அவனைச் சேர்ந்தது. மறு பிறவியில் பன்றியாகப் பிறப்பெடுத்து சேற்றில் உழன்றான். ஆயினும், முற்பிறவியில் செய்த புண்ணிய பலனாக, அவனுக்கு தன் தவறு புரிந்தது. அதற்காக வருந்தியவன், சிவபெருமானைத் துதிக்கத் தொடங்கினான். சிவபெருமான் இங்கே சுயம்புவாக வெளிப்பட்டார். அவரை வணங்கிய அவன், சிவ தீர்த்ததில் மூழ்கி எழுந்து, பாப விமோசனம் பெற்றான்.


pancha


ஒரு முறை இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், சுயம்பு வடிவான சிவபெருமானை வணங்கினார். அப்போது சிவனார் தன் பொன் நிறம், வெண்மை, சிவப்பு, கருமை, புகை நிறம் ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தி அருள்புரிந்தார். மேலும், “வெண்மை நிறத்தில் இருந்து நீரும், பொன் நிறத்திருந்து மண்ணும், செம்மை நிறத்திருந்து நெருப்பும், கருமை நிறத்திருந்து காற்றும், புகை நிறத்திருந்து ஆகாயமும் வெளிப்படும்’ என்றார். இதனைக் கேட்ட பிரம்மா, ஐந்து நிறங்களில் தோன்றி ஐந்து பூதங்களையும் தன்னில் அடக்கியவராக அருள் புரியும் ஈசனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம் இட்டு வணங்கினார்.


அதன் படி, சிவபெருமான் நீர்த் தலமான திருவானைக்காவலும், நிலத் தலமான காஞ்சியும், நெருப்புத் தலமான திருவண்ணாமலையும், வாயுத் தலமான காளஹஸ்தியும், ஆகாயமான சிதம்பரமும் என , ஐந்து பூதங்களையும் தன்னுள் ஒன்றாக அடக்கி உறையும் பிரானாக அருள் புரியும் தலம் என்பதால் உறையூர் எனப்பட்டது இந்தத் தலம். பெருமான் இங்கே “பஞ்சவர்ணேஸ்வரர்’ என்றும் “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்’ என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடப் பெறுபவராகவும் ஆனார்.


இங்கே சுவாமிக்கு இந்தப் பெயர் வந்ததற்கு தல புராணத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. வேத, ஆகம புராணங்களில் வல்லவராகத் திகழ்ந்த உதங்க முனிவர், ஒரு முறை தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடினார்.


அப்போது, ரிஷிபத்னி பிரபையை ஒரு முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது. கண் முன்னே தன் பத்தினி மாண்டதைக் கண்டு மன வேதனையுற்றார் முனிவர். மன நிம்மதி இன்றி தத்தளித்தார். கலைந்து அலைந்து களைத்த மனத்துக்கு மருந்தாக சிவபெருமானை வேண்டினார் முனிவர்.


உறையூர் பதிக்கு வந்தார். ஐந்து வேளையிலும் நீராட்டி அவனைத் தொழுதார். அப்போது, சிவபெருமான் காலை வழிபாட்டில் ரத்ன லிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன்னிறத்திலும், முதல் யாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்ர லிங்கமாகவும் ஜொலித்தார்.


pancha_1


ஐந்து வர்ணங்களில் அவன் காட்சி கண்ட முனிவர் மனம் அலைக்கழிப்பில் இருந்து அகன்று ஒருவாறு அடங்கி அமைதி பெற்றது. அதனால் சிவபெருமானை பஞ்ச வர்ணேஸ்வரர் என்று போற்றிக் கொண்டாடிய முனிவருக்கு ஞானம் கைவரப் பெற்று முக்தி அடைந்தார். இவ்வாறு ஆடிப் பௌர்ணமியில் உதங்க முனிவருக்கு பஞ்ச வர்ணங்களையும் காட்டி அருள்புரிந்ததாக புராணம் கூறுகிறது. அன்று பெருமானை வணங்கினால் மனம் நிம்மதி பெற்று முக்தி அடையும் என்பது வழிவழி நம்பிக்கை.


அதன் பின்னர் சுயம்புவாக அருள் புரிந்த பெருமான் மண்ணில் குடி கொண்டார். மீண்டும் வெளித் தோன்ற பெருமானே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.


ஒரு முறை சோழ அரசன் ஒருவன்… பட்டத்து யானையின் மீதேறி உலா வந்தான். திடீரென யானைக்கு மதம் பிடித்தது. செய்வதறியாது திகைத்தனர் பாகனும் அரசனும். அப்போது, கோழி ஒன்று குரலெழுப்பியபடி வேகமாகப் பறந்து வந்தது. பட்டத்து யானையின் மத்தகத்தின் மீது ஏறி தன் அலகால் குத்தியது. அதனால் யானை உடனே மதம் அடங்கப் பெற்றது. இவ்வாறு யானையின் மதம் அடங்கிய வேகத்தில் பறந்து சென்ற கோழி ஒரு வில்வ மரத்தடியில் தஞ்சம் புகுந்து மறைந்தது. அதனைப் பிடிக்க வந்த மன்னன், கோழியைக் காணாமையால் வருந்தி, அங்கே மரத்தடியில் தோண்டிப் பார்க்க அங்கே, சிவலிங்கம் இருக்கக் கண்டான்.


சிவபெருமானே தன்னையும் மக்களையும் காக்க கோழியாக வந்ததாகக் கருதிய மன்னன், பெருமானுக்கு அழகிய கோயிலை எழுப்பினான். இவ்வாறு இந்தக் கோயில் உருப்பெற்றது.


பலவீனர்கள் துன்பப் படும்போது, அவர்களைப் பெருமான் காத்து அருள்கிறார் என்பதால் இங்கே பக்தர்கள் தங்கள் துயர் தீர இப்பெருமானை மனமுருகி வேண்டுகின்றனர். அவர்களுக்கு மனபலம் தந்து அருளும் பிரான், முனிவருக்கு அருள் புரிந்ததுபோல், முக்தி நல்குவார் என்றும் நம்பிக்கை. இத்தலத்தில் வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறப்பில்லை என்று தோன்றும் வண்ணம், “திருமூக்கீச்சுரம்’ என்றும் பெயர். இங்கே உள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் உறையும் நாக கன்னியரால் பூஜிக்கப்பட்டு, பின்னர் சோழ மன்னனால் இங்கே கொணரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தல புராணம் கூறுகிறது.


இங்கே பெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரர், திருமூக்கிச்சுரத்தடிகள் என்று திருநாமம். அம்மை-காந்திமதியம்மை. வில்வம் தல விருட்சமாகத் திகழ்கிறது.


பரிகாரம்: பைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவரும் ஒரே சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். அதனால், இந்தத் தலம் கிரக தோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது. தேய் பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. சாப, பாப, தோஷ நிவர்த்தி தரும் சுவாமி இவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். பெருமானை ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். அவ்வகையில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 5வது தலமாகத் திகழ்கிறது.


கோயில் திருவிழாக்கள்: சித்ரா பெளர்ணமி, வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனித் திருமஞ்சனம், ஆடி பௌர்ணமி, ஆவணி மூலத் திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பெüர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப் பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியன.


திறக்கும் நேரம்: காலை 5.30-12.30 வரை, மாலை 4-8.30 வரை.


தகவலுக்கு: 0431-2768546


இருப்பிடம்: திருச்சி நகர்- உறையூரில்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger