அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 15 வயது மாணவியுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 வயது நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த பெற்றோர் குறித்த மாணவியை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவி புதன்கிழமை (30) காலை பாடசாலை செல்வதாக கூறி குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இடையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பாடசாலை சீருடையை மாற்றிவிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்கரைக்குச் சென்று காதல் லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பு நகர பொலிஸாரால் மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை மட்டக்களப்பு பொலிஸார் வியாழக்கிழமை காலையில் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மாணவியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அந்நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment