ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்னெடுப்பது, தென்னாபிரிக்க அனுசரணையில் பேச்சை முன்னெடுப்பது உட்பட சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்க 8 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசுக்கு எதிரான ஜெனிவா தீர்மானம், தென்னாபிரிக்க அனுசரணையில் நல்லிணக்க முன்னெடுப்புக்கள், வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல் நகர்வுகள் மற்றும் வடக்கு, கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாக ஆராய்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எட்டுப் பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராஜா ஆகியோரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன், கிழக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளன. எனவே, கூட்டமைப்பின் சார்பில் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானம் தேவை. கூட்டமைப்பில் உள்ளோர் தமது தனிப்பட்ட கருத்துக்களை கூட்டமைப்பு சார்பில் வெளியிடுவது பொறுத்தமற்றது. எனவே, இந்தக் குழுவே ஊடகங்களுக்கான கருத்துகள், அறிக்கைககள் வெளியிடுவது முதலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” – என்றார்.
Post a Comment