Home » » "தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்க" மோடி கோரிக்கை

"தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்க" மோடி கோரிக்கை

Written By Namnilam on Wednesday, May 28, 2014 | 1:15 PM

இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சமாதானம் மிக்க ஒரு வாழ்க்கைக்கான தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான தேசிய நல்லிணக்கத்துக்கான செயல்முறையை துரிதப்படுத்த ராஜபக்ஷவிடம் மோடி கோரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தத்தை கூடியவிரைவில் அமல்படுத்துவது இந்த செயல்முறைக்கு வழிவகுக்கும் என்றும் மோடி ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.


இன்று இலங்கை ஜனாதிபதி ராஜபகஷவுடனான மோடியின் சந்திப்பு குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், ‘மீனவர்கள் விவகாரம் குறித்தும், இந்தியாவின் வளர்ச்சி உதவி திட்டம் குறித்தும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். குறிப்பாக 500 மெகாவாட் சம்பூர் நிலக்கரி மின் திட்டம் தொடங்கப்படுவது தொடர்பிலும் இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்புகளை அதிகப்படுத்துவது தொடர்பிலும் இந்திய பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தினர்", என்றார்.

இதற்கிடையில் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை காலை முறைப்படி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனை சந்தித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் வெளியுறவு அமைச்சரான முதல் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ். அவரும் தனது பதிவியில் முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். இவர்களுடன் சேர்த்து பதவியேற்ற பல அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இன்று தங்களின் பதவிகளில் முறைப்படி பொறுப்பேற்றுகொண்டனர்.

இதற்கிடையில் இன்று மாலை நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சரவையின் முதல் நடவடிக்கையாக கருப்பு பணத்தை வெளிப்படுத்த ஒரு தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் துணை தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த குழுவில் சில உயர் அதிகாரிகளும் அடங்குவர். மத்திய ரிசர்வ் வங்கியன் துணை ஆளுநரும் அந்த குழுவின் உறுப்பினர் ஆவார். இது இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் பொறுப்பை காட்டுகிறது என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger