Home » » மாயமான தந்தையுடன் டுவிட்டரில் பேசும் மகள்

மாயமான தந்தையுடன் டுவிட்டரில் பேசும் மகள்

Written By Namnilam on Friday, May 2, 2014 | 12:59 PM

மலேசிய விமானம் நடுவானில் மாயமாகி இரு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை விமானம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதில் பயணித்த 239 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அனைவரும் நினைக்க தொடங்கிவிட்டனர். ஆனால் விமானத்தின் தலைமை மேற்பார்வையாளர் ஆண்ட்ருநாரியின் 18 வயது மகள் மைரா எலிசபெத்துக்கோ தனது தந்தை திரும்பி வருவார் என்ற நம்பிக்கை. தந்தையுடன் தினமும் டுவிட்டரில் பேசிக்கொண்டிருக்கிறாள் அன்பு மகள்.


விமானம் மாயமான அன்று உலகமே பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வல்லரசு நாடுகள் எல்லாம் விமானம் எங்கு சென்றது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தன. அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தந்தைக்காக மைரா டுவிட் செய்துள்ளார். அதில், "அப்பா.. எல்லா பேப்பரிலும், டிவியிலும் உங்களைப்பற்றிதான் செய்தி வருகிறது. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.. நாம எல்லாருமா சேர்ந்து பார்த்து சந்தோஷப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


விமானம் மாயமாகி 48 மணி நேரங்கள் கழித்த பிறகு மார்ச் 10ம்தேதி டுவிட் செய்துள்ள மைரா எலிசபெத், 48 மணி நேரம் ஆகிடுச்சு. இன்னும் ஏப்பா வரலை என்று கேட்டுள்ளார். அன்றே மற்றொரு டுவிட்டில், 'இவ்ளோ நேரமாகிடுச்சே.. எங்க அப்பா பசியோடு இருப்பார்' என்று நெஞ்சை பிழிவது போன்று, மகளுக்கே உரித்தான பாசத்தில் ஏங்கியுள்ளாள்.


ஆண்ட்ருநாரி ஒரு புட்ஃபால் ரசிகர். இதைத்தான் தனது மார்ச் 16ம்தேதியின் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் மைரா எலிசபெத். 'அப்பா.. உங்கள் அபிமான லிவர்ஃபூல் அணி வெற்றி பெற்றுள்ளது. சீக்கிரம் வந்தீங்கன்னா மேட்சை பார்க்கலாம். நீங்க எப்போதுமே மேட்ச பார்க்காமல் இருந்ததே கிடையாதே. இதுதாப்பா நீங்க மேட்ச்ச பார்க்காமல் இருக்கும் முதல் தடவை' என்று தனது தந்தையிடம் செல்லமாக கோபப்பட்டுள்ளாள்.


பிரதமர் மார்ச் 24ம்தேதியன்று அளித்த பேட்டியில், விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அன்றையதினம் மைரா தனது டுவிட்டரில் முதன்முறையாக நம்பிக்கையை இழந்து எழுதியிருந்தாள். அன்றுதான் அவளது மனதை இனம்புரியாத பயம் கவ்வ தொடங்கியிருந்தது 'எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. என்ன நினைப்பது என புரியவில்லை. நான் எதையோ இழந்ததை போல உணருகிறேன். நான் ஒரு வெறுமையை அனுபவிக்கிறேன். எனது உடல் சோர்வடைகிறது. குட் நைட் தந்தையே! உங்களை கட்டியணைத்தபடி நான் தூங்குகிறேன்!'


மலேசிய விமானம் மாயமாகி இருமாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், தனது தந்தையையும், உடன் பயணித்தோரையும் கடவுள் காப்பாற்றுவார் என்ற ஒற்றை நம்பி்க்கை மட்டுமே இந்த தளிரை, துளிர்த்து இருக்க செய்து வருகிறது. இப்போது அவர் தனது அனைத்து டுவிட்டுகளிலும் பயன்படுத்தும் ஒற்றை வார்த்தை 'கடவுளை நம்புகிறேன், அவர் காப்பாற்றுவார்' என்பதுதான்.


ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை டுவிட்டரில் வைத்திருக்கும் மைராவுக்கு மொழி, இனம், மதம் கடந்து தங்களது டுவிட்டுகள் மூலம் ஆறுதல் சொல்கிறார்கள். 'மனதை தளரவிடாதே அல்லா காப்பாற்றுவார்' என்ற இஸ்லாமிய நண்பர்களும், 'இயேசு அற்புதங்களை செய்ய வல்லவர்' என கிறிஸ்தவ தோழர்களும், 'நம்பினார் கைவிடப்படார்' என இந்து இதயங்களும் டுவிட் செய்வதன் ஒரே நோக்கம், தந்தையை எங்கே என்று தேடும் ஒரு அன்பு மகளின் கண்ணீரை தங்கள் கரங்களால் துடைப்பது மட்டுமே.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger