Home » » விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

Written By Namnilam on Wednesday, May 28, 2014 | 1:32 PM

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள மூன்று விடுதலைப்புலி சந்தேக நபர்களையும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் மூவரும், விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் என்றும், சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான தளமாக இவர்கள் மலேசியாவைப் பயன்படுத்திச் செயற்பட்டு வந்ததாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.


கொழும்பை வந்தடைந்த இவர்கள் இப்போது கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என கூறிய காவல்துறை பேச்சாளர், வெளிநாட்டில் வாழும் புள்ளிகளுடன் தொடர்பு கொண்டு இலங்கையில் யார் யார் செயற்படுகின்றார்கள் என்பதை இந்தப் பயங்கரவாதிகள் மூவரிடமிருந்தும் அறிய முடியும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


"இவர்கள் மூவரும் மலேசியாவில் பல வருடங்கள் இருந்திருக்கின்றார்கள். அங்கிருந்து இங்கு யார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பினார்கள். யார் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மூவரும் 39க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும், அகதிகள் அந்தஸ்திற்கான யுஎன்எச்சிஆர் அலுவலக அட்டைகளைப் பெற்றுள்ளவர்கள் என்றும், இவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் மலேசிய காவல்துறையினர் கூறியிருக்கின்றார்கள். இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு மலேசியாவை வந்தடைந்தார்கள் என்றும், அவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் விமானப்படைப் பிரிவின் பிரதித் தலைவர் என்றும் மற்றவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பிரிவின் துணை பொறுப்பாளர் என்றும் மலேசிய காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger