Home » » இராணுவ ஆக்கிரமிப்பினால் நிலங்களை இழந்தோருக்கு மாற்றுக் காணியாம்

இராணுவ ஆக்கிரமிப்பினால் நிலங்களை இழந்தோருக்கு மாற்றுக் காணியாம்

Written By Namnilam on Wednesday, May 14, 2014 | 2:02 PM

வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்கி அந்த மக்களை அங்கு குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வளலாயில் குடியேறுவதற்கு இணக்கம் தெரிவித்த மக்களின் வலி.வடக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.


இந்த மதிப்பீட்டின் பிரகாரம் நட்டஈடு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, வளலாய் பகுதியில் ஏற்கனவே குடியிருக்கும் 52 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு இருக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிவரும் நிலையில் வலி.வடக்கு மக்கள் எவ்வாறு அங்கு போய்க் குடியிருப்பதென வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கேள்வி எழுப்புகிறார். வலி.வடக்கு மக்களை ஏமாற்றும் அரசினதும் அரச அதிகாரிகளினதும் செயற்பாட்டுக்கு யாரும் துணை போகக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகிறார். வலி.வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 24 வருடங்களாக தனியார் காணிகளில் உள்ள முகாம்களில் அவலங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.


போர் முடிந்த பின்னராவது தங்களது காணிகள் மீள கிடைக்கும் என இந்த மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அந்தக் காணிகளை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிராக வலி.வடக்கு மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். நீதிமன்றங்களில் பல வழக்குகளையும் தாக்கல் செய்தனர். எனினும் எதனையும் பொருட்படுத்தாமல் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த மக்களுடைய வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொது மண்டபங்கள், வியாபார நிலையங்கள் ஆகியன இடித்தழிக்கப்பட்டன. இதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது வலி.வடக்கில் இராணுவம் உள்ள இடங்களில் மீள்குடியேற்றம் என்பதற்கு சாத்தியம் இல்லை என்று தளபதி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.


மேலும் மக்களுக்கான மாற்றுக்காணிகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம், அதனையே நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வலி.வடக்கில் இருந்த இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் மக்களில் மாற்றுக் காணிகள் பெறவிரும்புபவர்கள் மற்றும் நட்டஈடு பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுடைய புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாற்றுக் கிராமம் ஒன்று வளலாயில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வலி.வடக்கில் உள்ள மக்களுடைய காணிகளை அளக்கும் நடவடிக்கைகளைத் துரிதமாக்குமாறு யாழ்.மாவட்டச் செயலகத்தினால் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில் வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger