Home » » காரைதீவு பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம், தடைகோரிய வழக்கு தள்ளுபடி

காரைதீவு பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம், தடைகோரிய வழக்கு தள்ளுபடி

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 11:24 AM

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட காரைதீவு பிரதேச சபைக்குப் புதிய தவிசாளர் நியமனம் செய்யப்படுவதற்குத் தடை கோரி கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செலவுத் தொகையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவினால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் 3 ஆவது எதிர் மனுதாரராகவும், அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் 6 ஆவது எதிர்மனுதாராகவும், கொழும்பு, தேர்தல் ஆணையாளர் 7 ஆவது மனுதாராகவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா எட்டாவது எதிர்மனுதாராகவும் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.


இந்த மனு மீதான வழக்கு விசாரணை கல்முனை மேல்நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் முன்னிலையாகி வாதாடினார். இந்நிலையில், அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகரின் ஆணை, கிழக்கு முதலமைச்சரின் ஆணை என்பவற்றை இரத்துச் செய்வதற்குச் சட்டரீதியான எந்த வலுவும் மனுதாரரின் மனுவில் இல்லையென மன்று தீர்மானிப்பதாகவும், இந்த வழக்கில் சட்ட ரீதியான தவறுகள் எவையென்பதை மனுதாரர் சுட்டிக்காட்டத் தவறியதாலும், முதல் தோற்றளவிலேயே நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் மனு இல்லாத படியாலும், குறிக்கப்பட்ட மனு செலவுத் தொகையின்றித் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுத் தீர்ப்பளித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger