Home » » காணிகள் சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

காணிகள் சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 11:20 AM

யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஐனாதிபதிக்கு கடிதம் எழுதுமாறு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது. விமானப்படை மற்றும் தரைப்படையினரின் தேவைகளுக்கன சுமார் 191ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மிக அண்மையில் சுவீகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு கடந்த 21.04.2014 நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொதுமக்களுடைய காணிகள் மீள அவர்களிடம் கையளிக்கப்படவேண்டும், பொதுமக்களுடைய காணிகளைச் சுவீகரிப்பதற்காக ஒட்டப்பட்டிருக்கும் பிரிவு 2 இன் கீழான அறிவித்தல் மீளப்பெறப்படவேண்டும் என பிரேரணை நிறைவேற்றியிருந்தது.


இத்தீர்மானத்தை ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் முன்மொழிய தமிழ்தேசிய கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழிமொழிந்தார். இந்நிலையில் அதன் பின்னர் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நகுலேஸ்வரம் பகுதியில் 183 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கான பிரிவு 2 அறிவித்தல் 09.04.2014ஆம் திகதியும், அதே பகுதியில் 3 ஏக்கர் காணியும் 2 வீதிகளையும் சுவீகரிப்பதற்கான பிரிவு 2 அறிவித்தல் 28.04.2014ம் திகதியும் சேந்தாங்குளம் பகுதியில் 40 பேர்ச் காணியை சுவீகரிப்பதற்கான பிரிவு 2 அறிவித்தல், 28.04.2014ஆம் திகதியும், அச்சுவேலி பகுதியில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிக்குள் 9குடும்பங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான பிரிவு 2 அறிவித்தல் 24.04.2014ஆம் திகதியும் ஒட்டப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


கடற்படை, விமானப்படை, மற்றும் தரைப்படை ஆகியவற்றின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மயிலிட்டி பகுதியில் ஓர் ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட முடியாது அவை மக்களிடமே வழங்க ப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் இந்த சுவீகரிப்பு இடம்பெறுகிறது. மேற்படி பிரிவு 2 அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனவே 21.04.2014ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பிவைப்பதன் மூலம் மேற்படி காணி சுவீகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை, வலிகாமம் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுவீகரிப்புக்கான அறிவித்தல் பிரசுரங்கள் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலரிடமும், யாழ்.மாவட்டச் செயலரிடமும் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.இந்த விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என மாவட்டச் செயலர் கூறினார். காணி ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பிரிவு 2 பிரசுரங்களை தாம் ஒட்டியதாக பிரதேச செயலர் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பான அரசாங்க அதிபருக்குத் தெரியாமல், அவருக்கு அறிவிக்கப்படாமல் கொழும்பிலிருந்து ஆணை கிடைக்கின்றது என்பதற்காக மக்களுக்கும் அறிவிக்காமல் காணி சுவீகரிப்பிற்கான நடைமுறைகளைப் பின்பற்றாமல் எவ்வாறு சுவீகரிப்பு பிரசுரம் ஒட்டப்படமுடியும் என கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர் காணி விடயங்களை கையாள்வதற்கு பிரதேச செயலர்களுக்கு சிறப்பான உரித்துக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்கமைவாக அவர்கள் எம்முடைய அனுமதியினைப் பெறாமல் தனித்துச் செயற்படுவதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் அவர்களுக்கு உரித்துள்ளது.


ஆனாலும் அறிவித்தலுக்காக அல்லது நிர்வாக ஒழுங்கிற்காக அந்த விடயங்களை மாவட்டச் செயலகத்திற்குத் தெரியப்படுத்தவேண்டும் என கூறினார். கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் , கடந்த சில தினங்களாக தனியார் காணிகளை தமக்கு வழங்குமாறு அனுமதி கேட்டு படையினர் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கோரிக்கை கடிதங்களை எமக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து பொதுமக்களுடைய காணிகளை வழங்க முடியாதென பதில் வழங்கியிருக்கிறேன். இது குறித்த உத்தியோகபூர்வ பதில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. - என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger