Home » » எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன், பசில்

எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன், பசில்

Written By Namnilam on Monday, May 5, 2014 | 5:36 PM

வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வட மாகாண சபை முதலமைச்சரை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சந்தர்ப்பம் கேட்டமைக்கு இன்னும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை என்பது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


வடமாகாண சபையின் முதலமைச்சரினால் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்திக்க முடியுமாயின் ஏன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான என்னை சந்திக்க முடியாது?


அண்மைக்காலமாக முதலமைச்சருக்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு நான் வடக்கின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றேன். எனது அழைப்பை முதலமைச்சர் தொடர்ந்து புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கி பணியாற்றுவது குறித்து முடிவை எடுத்து விடுவேன் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.


வடக்கில் மூலை முடுக்குகள் குறித்து என்னை விட அறிந்தவர் எவரும் இல்லை. வடக்கு முதலமைச்சருக்கு வடக்கின் எல்லைகள் கூட தெரியாது. வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து அவர் புலம்பெயர் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.


வட மாகாண சபை உரிய முறையில் இயங்கப்படுவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் உலகம் முழுவதும் கூறிக்கொண்டிருக்கின்றார். நாங்கள் செய்துகாட்டுகின்றோம் என்றுதான் இவர்கள் வட மாகாண சபை அதிகாரத்தை பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர். மேலும் உள்ளூராட்சி மன்றங்களையும் பெற்றுக்கொண்டனர்.


வட மாகாண சபையினதும் உள்ளூராட்சி மன்றங்களினதும் அதிகாரங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் தற்போது மக்களுக்கு சேவை செய்யாமல் மத்திய அரசாங்கத்தை குறைகூற ஆரம்பித்துவிட்டனர்.


யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக வருமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனாதிபதி கோரினார். ஆனால் அவர் மறுத்தார். எனினும் அதில் தற்போது இணைந்துகொண்டு அரசாங்கத்தைக் குறைகூறுகின்றார். அங்கு சென்றும் அரசாங்கத்தையே விமர்சிக்கின்றனர்.


மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. மீன்பிடி, சுகாதாரம், கல்வி, விவசாயம், கைத்தொழில் என முக்கியமான விடயதானங்கள் மாகாண சபையிடம் உள்ளன.


ஆனால் உரிமையாக உள்ள விடயங்களை விட்டுவிட்டு உரிமையற்ற விடயங்களையும் கோருவதையும் அதற்காக பிரேரணைகளை நிறைவேற்றுவதையும் கூட்டமைப்பினர் செய்துவருகின்றனர்.


வட மாகாண சபை முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடவேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இனனும் இருக்கின்றேன். ஆனால் அவர் அதற்கு இதுவரை சாதகமான பதிலை அளிக்காமல் இருக்கின்றார்.


வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு உண்மையான ஆர்வம் கூட்டமைப்பினருக்கு இருந்தால் அதற்கு வழிகளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறு நேர்மையான நோக்கம் இருந்தால் கூட்டமைப்பினர் எம்முடன் இணைந்து செயற்படலாம்.


வடக்கு முதலமைச்சரை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இன்னும் இருக்கின்றேன். அண்மைக்காலமாக வட மாகாண முதலமைச்சருக்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு நான் வடக்கின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றேன் என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger