Home » » இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீரும், சுரேஸ் எம்.பி

இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீரும், சுரேஸ் எம்.பி

Written By Namnilam on Monday, May 12, 2014 | 1:50 PM

இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களுடனான கலந்துயைராடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மட்டக்களப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் நடைபெற்றது.


அதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும் என்றார்.


இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் விசாரணை நடைபெறும். விசாரணையின் பின்னர் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்;றப்;படும். அந்த தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான தீர்மானங்களாக இருக்காது.


தீPர்மானத்தின் விளைவாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற சில நாடுகள் இலங்கைக்கு எதிராக பயணத்தடை மற்றும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கொள்ளும். இது அரசுக்கு பெரும் பாதிப்பாக அமையும். சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தி இலங்கையில் ஒரு அமைதிச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.


இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென்னாபிரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கினால் சிறந்த ஒரு நிலையை உருவாக்க முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் தென்னாபிரிக்காவின் அனுசரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் கூறிய கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.


நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவே தீர்வைப் பெறவேண்டும் என அமைச்சர் கெஹெலிய கூறுகின்றார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படமாட்டாது என்பது எமக்கு தெரியும். எமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் நாடாளுமன்ற தெரிவுக்குழு செத்துப்போய் விட்டது என கூறினார். இலங்கை அரசின் மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்று சுரேஸ் எம்.பி கூறினார்.


இந்தியாவில் புதிய ஆட்சி வரவுள்ள நிலையில் இந்தியாவின் புதிய அரசை பாரதிய ஜனநாயக கட்சியோ அல்லது மூன்றாவது அணியோ பெற்றாலும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.


இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவும் பாகிஸ்தானுக்கான உளவாளி ஒருவர் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் இந்தியாவுக்கு இலங்கை மீதான கேள்வியினை எழுப்பியுள்ளது.


இலங்கை தொடர்பில் இந்தியாவின் கொள்கை வகுப்பு என்பது இலங்கையில் இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி ஒரு அமைதியான இலங்கையை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதியான நாடாக உருவாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உண்டு என்றும் அவர் மேலும் கூறினார்.


சம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் உள்ளனர். இவர்களை சனிக்கிழமை (10) நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்று பார்வையிட்டோம். கடுமையான வெயிலில் அந்த மக்கள் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருக்க முடியாமல் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.


மூதூரிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றால், சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைக்கு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம் எங்களை எமது சொந்த இடங்களுக்கு அனுப்பினால் எங்களுடைய அரைவாசி வருத்தம் குறைந்து விடும் என அந்த மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.


700 குடும்பங்களைச் சேர்ந்த 3000பேர் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்கு போக முடியாது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை இங்குள்ளது.


மீன் வியாபாரியோ, உடு துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியோ இந்த முகாமுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.


ஜனாதிபதி நினைத்தால் அந்த மக்களின் நிலத்தை அவர்களுக்கு உடன் வழங்க முடியும். தமது சொந்த குடும்ப தேவைகளுக்காக அந்த நிலத்தை வைத்துக்கொண்டு 3000 மக்களின் வாழ்வை சீரழிக்காமல் அவர்களின் பரிதாப நிலையை கருத்திற்கொண்டு சம்பூர் மக்களின் நிலத்தை அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது எனவும் இதன் போது சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger