Home » » இந்தியாவை விட்டு விலகிச் செல்ல முடியாது – இரா.சம்பந்தன்

இந்தியாவை விட்டு விலகிச் செல்ல முடியாது – இரா.சம்பந்தன்

Written By Namnilam on Friday, May 2, 2014 | 11:37 AM




இலங்கைப் பிரச்சினையில், அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகுமுறைகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம், ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில், ஆராயப்பட்டது.அங்கு உரையாற்றிய இரா .சம்பந்தன், “இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் முயற்சி எடுப்பது பற்றி அரசுத் தரப்பில் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தெரிவுக்குழு செத்துப்போன விடயம்.அதற்கு உயிர் கொடுக்கவோ அல்லது அதன் கூட்டத்தில் பங்குபற்றவோ கூட்டமைப்பு முனையாது.அனைத்துலகம் இன்று எமது பக்கத்தில் உள்ளது.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், சமரச முயற்சியில் ஈடுபடும் இலக்கோடு தென்னாபிரிக்கா எமக்கு விடுத்த அழைப்பும் அனைத்துலகம் எங்களுக்குத் தந்துள்ள அங்கீகாரத்துக்கான சான்றுகளே; சமிக்ஞைகளே.


அனைத்துலகத்தின் கரத்தைப் பற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் நேர்மை, பற்றுறுதியுடன் செயல்படுவோம்.நாம் இந்தியாவிலிருந்தும் விலகி நிற்கமுடியாது.ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.அதற்கு இந்தியாவுக்குக் காரணங்கள் இருக்கலாம்.ஆனால் அதற்காக நாம் கண்டபடி இந்தியாவை விமர்ச்சிக்க முடியாது; விமர்ச்சிக்கவும் கூடாது.


அதற்காக நாம் இந்தியாவை விட்டு விட்டு விலகிச் செல்லவும் முடியாது.ஈழத் தமிழர்களின் நலனுக்காக நாம் இந்தியாவுடன் செயற்பட்டேயாக வேண்டும்.இந்தியத் தேர்தலின் பின்னர் புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் சேர்ந்த ஆக்கபூர்வமாக செயற்படுவதற்கும் நாம் ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.எது, எப்படி என்றாலும், நாம் ஒற்றுமையாக, நிதானமாக செயற்பட வேண்டிய காலகட்டம் இது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்று தனியான கொள்கைகள் உண்டு; கோட்பாடுகள் உண்டு.அவற்றின் வழி நாம் செயற்பட வேண்டிய முக்கிய தருணம் இது.அதேபோல, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், சிந்தனையோட்டங்கள் இருக்கலாம்.அவை சில சமயங்களில் கட்சியின் - தமிழ்க் கூட்டமைப்பின் - கொள்கை, கோட்பாடுகளுடன் ஒத்துப் போகாமல் முரண்படக்கூடும்.ஆனால் அந்த விடயங்களையும், நிலைப்பாட்டையும் கூட்டமைப்பின் நிலைப்பாடாக அர்த்தம் தரும் விதத்தில் நாங்கள் முன் வைக்கக்கூடாது.


எனவே, ஒவ்வொரு உறுப்பினரும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் மிகக் கவனமாகவும், அவதானமாகவும் செயற்படவேண்டும்.உள்நாட்டு, வெளிநாட்டு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுகையில் எழக்கூடிய குழப்பங்கள், அர்த்த மாற்றங்கள் இன்றைய நிலையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.எனவே, கட்சியின் கொள்கை கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கு முரணாக அம்சங்கள் வெளியாகாமல் தவிர்ப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு குழுவை இன்று தெரிவு செய்திருக்கின்றோம்.அதனுடன் கலந்தாலேசித்து விடயங்களை வெளிப்படுத்துமாறு ஆலோசனை கூறுகின்றேன். என்று தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா தலைமையிலான இந்தக் குழுவில் எட்டுப்பேர் இடம்பெற்றுள்ளனர்.


இந்தக் குழுவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன்.செல்வராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் இடம்பெறுவதாகவும் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger