Home » , » அஜீரண கோளாறால் ஏற்படும் பிரச்சினைகள்

அஜீரண கோளாறால் ஏற்படும் பிரச்சினைகள்

Written By Namnilam on Thursday, June 12, 2014 | 7:03 PM

உடலில் இருந்து கழிவுப் பொருள் வெளியேற்றம் மனிதனுக்கு அன்றாடம் நிகழ வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, `காலைக் கடன்' எனப்படும் காலையிலேயே கழிவு வெளியேற்றம் ஏற்படும் பொழுதுதான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிகின்றது.

இதனால் சிக்கல் ஏற்படும் பொழுது `மலச்சிக்கல்' என்கிறோம். தினமும் சுமார் 4-5 டம்ளர் நீர் அருந்துபவர்கள் அநேகர். மேலும் டீ, காபி, மோர் போன்றவைகளும் உட்கொள்வர். நமது உமிழ்நீர், அமில நீர், பித்த நீர், கணைய நீர் இவையும் நமது உணவுக் குழாயில் வந்து கலக்கின்றது.

சிறு குடலில், ஒரு பகுதி நீர் மீண்டும் உடலுக்குள் உறிஞ்சப்படுகின்றது. பெருங்குடலும் 1-லிருந்து ஒன்றரை லிட்டர் நீரை மறுபடியும் உறிஞ்சுகின்றது. 200-2500 மில்லி லிட்டர் நீர் கழிவுப் பொருளோடு கலப்பதன் காரணமே கழிவு வெளியேற்றம் அன்றாடம் எளிதாக நடக்கின்றது.

குடலில் தேவையான அளவு நீர் உறிஞ்சப்படாவிடில் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிகமான நீர் உறியப்பட்டால் கழிவு கடினமாகி கழிவுச் சிக்கல் ஏற்படும். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவதும், நார்ச்சத்து மிக்க உணவினை உட்கொள்வது பொதுவான எளிய தீர்வு.

கழிவுச்சிக்கல் அறிகுறிகள் :

* வாரம் 2-3 முறை மட்டுமே கழிவு வெளியேற்றம்.
* சிரமத்துடன் கூடிய கடினமான வெளியேற்றம்.
* முழுமையான வெளியேற்ற உணர்வு இன்மை. சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை தாய் பாலிலிருந்து டின் பாலுக்கு மாறும் பொழுது கழிவுச் சிக்கல் ஏற்படும். பள்ளிச் செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும் சிறிது நாள் இந்த பிரச்சனை இருக்கும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 4-5 முறை கழிவு வெளியேற்றம் இருக்கும். சுமார் ஐந்து வயதினை நெருங்கும் பொழுது நாள் ஒன்றுக்கு ஒருமுறையே நிகழும்.

கழிவு சிக்கலுக்கான பொதுவான காரணங்கள் :

* போதிய அளவு உடல் உழைப்பின்மை.
* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை.
* உணவில் நார்ச்சத்து இன்மை.
* அன்றாட வாழ்வின் முறையில் மாற்றம்.
* (வெளியூர் செல்லுதல், இரவு கண் முழித்தல் போன்றவை)
*அதிக மருந்தினையே இதற்காக உட்கொண்டு, காலப்போக்கில் மருந்தினாலேயே குடல் இயங்குவது.
* உணவுப் பழக்கத்தில் ஒழுங்கின்மை.
* மன உளைச்சல்.
* கர்ப்ப காலம்.
* அதிக டீ, காபி.
* அதிக மாமிசம்.
* அதிக மது.

கீழ்க்கண்ட சில பாதிப்புகளாலும் கழிவுச்சிக்கல் ஏற்படும்...

* சர்க்கரை நோய்.
* தைராய்டு பிரச்சனை.
* குடல் புற்றுநோய்.
* நரம்பு நோய் பாதிப்பு.
* சில வகை மருந்துகள். ஆண்களை விட பெண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. முதியோருக்கும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. கழிவுச்சிக்கல் தொடர்ந்து இருக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்
* நீண்ட கால பிரச்சனையாக மாறலாம்.
* பசியின்மை, அஜீரணம், தலைவலி, வயிறு உப்பசம் ஏற்படலாம்.
* குடல் புற்றுநோய்.
* மூட்டு வலி.
* அடி வயிற்றில் தசை பிடிப்பு, அடிக்கடி வாயு வெளியேற்றம்.
* கவலை.

பொதுவான கழிவுச் சிக்கலுக்குத் தீர்வு:

* காலையில் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீர் + அரை மூடி எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
* அரை டம்ளர் வெது வெதுப்பான நீர் + அரை டீஸ்பூன் சோம்பு பொடி அருந்த வேண்டும்.
* இரவு உணவிற்குப் பிறகு நிதானமாக 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.
* உணர்வு ஏற்படும் பொழுது கட்டுப்படுத்தக் கூடாது.
* காலை வெறும் வயிற்றில் 2 கிளாஸ் நீரும் அருந்தலாம்.
* தினமும் 3 லிட்டர் நீராவது குடியுங்கள்.
* உடற்பயிற்சி அவசியம்.
*நார்ச்சத்து பொட்டி கடைகளில் கிடைக்கின்றது. அதனை எடுத்துக் கொள்ளலாம்.
* உலர்ந்த அத்திப்பழம் 3-5 வரை இரவில் சிறிதளவு நீரில் ஊற வைத்து காலை நீரும், பழமும் எடுத்துக் கொள்ளலாம்.
* அவசர உணவுகளை அடியோடு தவிர்த்து விடவும்.
* யோகா பயிற்சி சிறந்தது.
* நார்ச்சத்து மிக்க காய்கறி, கீரை வகைகள், கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், பச்சைப் பயிறு, பழங்கள், குறிப்பாக, கொய்யாப் பழம், முருங்கை போன்றவை மிகவும் சிறந்தது.
* ஜுஸ், சூப் போன்றவையும் நல்லதே.
* மருத்துவ ரீதியான காரணங்களுக்கு மருத்துவ பரிசோதனை மூலம் தீர்வுக் காண வேண்டும். இதனை மருத்துவர் நேர் கண்காணிப்பிலேயே செய்ய முடியும்.
* அதிக வயிற்று வலி, அதோடு கூடிய ஜுரம்.
* வெளிப்போக்கில் ரத்தம் போன்றவை உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டியவை.

எரிச்சல் கொண்ட குடல் நோய் வயிற்று வலி, வயிற்றில் சங்கடம், வயிற்றுப் போக்கும், மலச்சிக்கலும் மாறி மாறி ஏற்படுதல், உணவு உண்டவுடன் வெளிச்செல்ல ஏற்படும் உணர்வு ஆகியவை எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறிகளாகும்.

இதற்கு இதுதான் மூல காரணம் என குறிப்பிடும் உள் காரணம் எதுவும் இருக்காது. இதற்கென தீர்வான மருத்துவ சிகிச்சை என்று ஒன்றினை முழுமையாகத் தர முடியாவிடினும் இந்த பாதிப்புகளை தவிர்க்க கூடிய சில வழிமுறைகளை கையாள முடியும்.

அடிப்படையில் இது ஆபத்தானது என்றில்லாவிடினும், நிரந்தர தொந்தரவாக ஒருவருக்கு இருக்கும். வயது 50-க்கு மேல் இருப்பவர்களுக்கும், இந்த காரணத்தினால் எடை குறைபவர்களுக்கும், பரம்பரை பாதிப்பு உடையவர்களுக்கும் கழிவுடன் கூடிய ரத்தப் போக்கு உடையவர்களுக்கும் கூடுதல் பரிசோதனையும், சிகிச்சையும் தேவை.

பொதுவில் இது மூளைக்கும், வயிற்றுப் பாதைக்கும் தொடர்புடையது. சில நேரங்களில் குடலில் ஏற்படும் கிருமி பாதிப்புகளாலும் மற்றும் சில மருத்துவ காரணங்களாலும் இதுபோன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை மூலமே இதனை கண்டறிய முடியும்.

குடல் எரிச்சல் நோய் கொண்டவர்கள் அடிக்கடி அன்றாடம் ஏற்படும் தொந்தரவினால் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் மனச் சோர்வு அடைவர்.

எரிச்சல் குடல் நோய் அறிகுறிகள் :

* வயிற்று வலி.
* அதிகமான வயிற்றுப் போக்கு (அ) அதிகமான மலச்சிக்கல்.
* வயிறு உப்பசம்.
* உடல் அசதி.
* உடல் வலி.
* தலைவலி. அதிக கவலை, மன உளைச்சல் கொண்டவர்களையே இந்த நோய் பாதிக்கின்றது. இதனைப் பற்றிய மருத்துவ ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. மருத்துவ ஆலோசனை மூலம் இந்நோயினை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

தீர்வு:

* சில குறிப்பிட்ட உணவுகள் நோயின் தீவிரத்தினை அதிகரிக்கலாம். அதனை தவிர்க்க வேண்டும்.
* மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவு உதவலாம். பொதுவில் இப் பாதிப்பு உடையவர்கள் நார்ச்சத்து உணவினை கூட்டும் பொழுது நோயின் தீவிரமும் அதிகமாகின்றது.
* வலி மற்றும் நோய்க்கான மருந்தினை மருத்துவர் மூலமே பெற வேண்டும்.
* தியானம், யோகா, மன அமைதி படபடப்பற்ற வாழ்க்கை சூழ்நிலை இவை இந்த நோய்க்கு பெரிதும் உதவுகின்றது.
* முதலில் மருத்துவ பரிசோதனை செய்து என்ன பாதிப்பு என உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் பாதிப்பினை அதிகப்படுத்தும் சில உணவுகளை நீங்களே அறிந்து நீக்கி விடலாம்.
* குடலில் கிருமிகள் இருந்தால், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
* `என்ஸைம்' சிகிச்சை தேவையானதா என மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger