Home » , , » வேட்டியை ஆயுதமாக்கிய காந்தி

வேட்டியை ஆயுதமாக்கிய காந்தி

Written By Namnilam on Thursday, July 17, 2014 | 2:23 PM

இந்தியா விடுதலை அடைவதற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பல கிளப்புகள் சென்னையில் இருக்கின்றன. கிளப் என்றால் மனமகிழ்மன்றம். வேலை முடிந்த பின் துரைமார்களும் இவர்களின் துணைவியர்களான துரைசானிகளும் துரைமார்களுக்கு உறுதுதுணையாகவும் இருக்கும் உள்ளூர் சொம்புத் தூக்கிகளும் கூடிக் களிக்கின்ற இடங்கள்தான் இந்த மனமகிழ்மன்றங்கள். 

இங்கே உறுப்பினர்களாக இருந்தவர்கள் மேற்கத்திய கலாசாரத்தின் படி முழுக்கால் ஒரு சட்டை முழுக்கைச் சட்டை, அதற்கும் மேலே கோட், கழுத்திலே ரை, கால்களில் ஷூக்கள் சகிதம் செல்வது வழக்கம். அதற்கேற்ப அவற்றின் விதிகளும் உருவாக்கப்பட்டன. காந்தியின் நூற்பும் தமிழகத்தின் பங்கேற்பும் அஹிம்சை என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்ட காந்தி வழக்கறிஞருக்காக லண்டன் சென்று படித்தபோதும், தென்னாபிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும், கருப்பு இனமக்களை அடிமைப்படுத்திய வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே தான் காந்தியும் 'கோட்சூட்டில்' இருந்தார். 

இந்தியாவுக்கு வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபின் தோற்றத்தில் மாற்றம் செய்தார். "1921 செம்டம்பரில் காந்தி தமது இயக்கத்துக்கு ஒரு இறுதி உந்துவிசையை அளித்தார். 

வாழ்க்கையின் எஞ்சிய காலத்தில் ராட்டையில் நூற்ற நூலால் தயாரிக்கப்பட்ட அரை ஆடையையும் மேலே ஒரு துண்டையும் அணிவதைத் தவிர வேறெதையும் அணியப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்தார்" (நள்ளிரவில் சுதந்திரம் நூல் பக். 88)அரைஆடை என்பது வேட்டி. காந்தி வேட்டிக்கு மாறிய அல்லது வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாக வேட்டியை மாற்றிய இடம் தமிழ்நாடு என்பது வரலாறு. 

மதுரை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட போதுதான் அவர் இந்த ஞானத்தைப் பெற்றார். தமிழகத்தின் வேட்டிக்கு அவ்வளவு மதிப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். இதனுடைய நீட்சிதான் அந்நியத் துணிகள் பகிஷ்கார (நிராகரிப்பு) இயக்கம். 

ஆங்கில அரண்மனையில் வேட்டியுடன் நுழைந்த காந்தி காந்தியடிகளின் இந்த ஆடைப் போராட்டத்தில் கடுப்பேறிய, பிரிட்டிஷ் பிரதமராக இருந்த, வின்ஸ்டன் சர்ச்சில் கோபத்தோடு காந்திக்கு சூட்டிய பட்டப் பெயர் தான் 'அரை நிர்வாணபக்கிரி'. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய வட்டமேசை மாநாட்டுக்கு வருமாறு காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

பிரிட்டிஷ் சிறையிலிருந்து பிரிட்டனின் பேச்சுவார்த்தைக்குச் சென்ற முதலாவது மாமனிதர் காந்திதான். எப்படிச் சென்றார் ?.. "கப்பலிலிருந்து இறங்கும் போதும் காந்தி அரை ஆடையுடனும் மூங்கில் கைத்தடியுடனும்தான் இருந்தார்" மேன்மை தங்கிய பிரிட்டிஷ் பேரரசரின் மகாராணியாரின் பிரதிநிதியான பிரதமருடனும் வைஸ்ராயுடனும் பேச்சுவார்த்தை நடத்த அரண்மனைக்குள்ளேயே காந்தியடிகள் வேட்டியுடன்தான் நுழைந்தார். 

இன்னஇன்னாரைச் சந்திக்கும் போது இன்னஇன்ன நிகழ்வுகளுக்கு இன்னஇன்ன உடையோடு தான் என்கிற மேற்கத்திய கலாசாரத்தை முறித்துப் போட்டவர் காந்தி. எதிர்ப்பு அரசியலின் அடையாளம் வேட்டி காந்தி இப்படி வேட்டியுடன் வருவதை வெள்ளை ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. 

"முன்னாளில் ‘இன்னர் டெம்பிள்’ வழக்கறிஞராக இருந்தவரும் இந்நாளில் தேசத்துரோகியான அரைநிர்வாணப் பக்கிரியாக இருப்பவருமான காந்தி பேரரசரின் பிரதிநிதியுடன் சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வைஸ்ராய் மாளிகையின் படிகளில் ஏறிவருவது அருவருப்பாகவும் தரம் தாழ்ந்ததாகவும் காட்சிஅளிக்கிறது என்று கூறி சர்ச்சல் எதிர்ப்பு தெரிவித்தார்" (நள்ளிரவில் சுதந்திரம் நூல் பக். 97)வேட்டி அணிந்துவருவது அருவருப்பானது, தரம் தாழ்ந்தது என்று கூறிய சர்ச்சில் இன்னும் சாகவில்லை; வெள்ளைய ஏகாதிபத்தியம் இன்னமும் வெளியேறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் ஜிம்கானாகிளப், சென்னை கிரிக்கெட் கிளப் வகையறாக்களுக்குள் வேட்டி கட்டிக் கொண்டு உள்ளே வராதே என்பது. 

ஒருவேளை காந்தியே மீண்டும் வந்திருந்தாலும் இவர்கள் தடுத்திருப்பார்கள். 'விதி'ப்படி கிளப் உறுப்பினர்கள் உடலில் 'வெள்ளை' ரத்தம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது போலும்! என்ன செய்யப்போகிறோம்? உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்பது சங்க கால ஆடைக்கலாசாரத்தைச் சொல்வது. இடுப்பில் ஒரு வேட்டி மேலே ஒரு துண்டு என்ற ஆதித்தமிழரின் உடையில் மாற்றம் வரலாம். மாற்றத்தை ஏற்பது மனித இயல்பு. 
ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத் தமிழர்களின் அடையாளமான வேட்டியை அணிந்து வந்தால் - ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாக காந்தியடிகள் கைக்கொண்ட வேட்டியை அணிந்து வந்ததால் - முதலமைச்சராக இருந்தாலும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் - மூத்த வழக்கறிஞர்களாக இருந்தாலும் சுட்டு விரல் நீட்டி வெளியே வழிகாட்டும் இழிதகைமையை ஏற்கப் போகிறோமா? மாறாத விதிகள் என்று ஏதும் இல்லை. அரசமைப்புச் சட்ட விதிகள் நூற்றுக்கும் அதிகமான முறை திருத்தப்பட்டிருக்கும் போது அதை விட உயர்வானதாக கிளப் விதிகள் இருக்க முடியுமா என்ன? அதுவாகவும் திருந்தலாம். திருத்த வைக்கவும் செய்யலாம்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger