Home » , » ஆட்டிப்படைக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம்

ஆட்டிப்படைக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம்

Written By Namnilam on Thursday, August 28, 2014 | 10:36 PM

கூகுள் நிறுவனத் தயாரிப்புகள் மக்களிடம் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன. அப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு போட்டியாக கூகுள் களமிறக்கிய ஆண்ட்ராய்ட் இயங்குதள ஸ்மார்ட் போன்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டியிருக்கின்றன. அப்பிள் ஐ.ஓ.எஸ் போன்களை அப்பிள் நிறுவனமே தயாரித்து வழங்குகிறது. 

அதுபோல அல்லாமல் ஆண்ட்ராய்ட் மென்பொருளை இலவசப் பயன்பாடாக வெளியிட்டதன் மூலம் எந்த நிறுவனமும் இம்மென்பொருளை இணைத்து கைபேசிகளை தயாரித்துக் கொள்ளலாம் என்ற வழிமுறையை கூகுள் உருவாக்கியது. இந்த வியாபார யுக்திதான் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் விதவிதமான மாடல்களில் பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டுள்ளன. 

சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையைப் பெறுவதற்கு ஆண்ட்ராய்ட் மென்பொருளும் ஒருகாரணம். இன்று மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நோக்கியா கைபேசி நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட தானும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களை களமிறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியபோது, விண்டோஸ் 8 இயங்குதள ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்யவே வாங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வணிகப் போட்டிகளை சமாளித்து ஆண்ட்ராய்ட் ஃபோன்களை நிலைநிறுத்துவதற்கு கூகுள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் 5ஆம் பதிப்பை உருவாக்கிவருகிறது. 

இப்பதிப்பு ஆண்ட்ராய்ட் எல் என்று குறிப்பிடப்படுகிறது. இதன் முழுமையான பெயர் லாலிபாப் அல்லது லிக்கோரிஸ் என்பதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். முந்தைய பதிப்புகள் அனைத்தும் ஆங்கில அகர வரிசையில் ஆப்பிள் பை, பனானா பிரெட், கப் கேக், டோனட், எக்லேர், ஃபிரையோ, ஜிஞ்சர் பிரெட், ஹனிகோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன், கிட்கேட் என்று சாக்லெட், கேக், ஐஸ்கிரீம் போன்ற திண்பண்டங்களைக் குறிப்பிடும் பெயர்களே ஒவ்வொரு பதிப்புக்கும் இடம்பெற்றுள்ளது. 

அந்த வரிசையில் அடுத்த பதிப்பு ‘லாலிபாப்’ ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவு தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை சான்பிரான்சிஸ்கோவில் கடந்த ஜூன் 25 அன்று நடைபெற்ற கூகுள் தொழில்நுட்ப கருத்தரங்கில் ஆண்ட்ராய்ட் எல் குறித்து முன்னோட்டமான தகவல்களை வெளியிட்டார். 

அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறோம். இப்புதிய பதிப்பில் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பான தோற்றம் தரும் வகையில் மெட்டீரியல் டிசைன் தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனிமேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இயக்கும்போது புதிய அனுபவத்தை தருவதாக அமையும். கணினியில் உள்ளதுபோல ஐகான்களுக்கு நிழல் தோற்றம் தரப்பட்டுள்ளது. ஐகான்களிலும் வட்டம், சதுரம் எனப் பல வடிவ மாற்றங்களுடன் கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீபேட் மற்றும் டயலரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோல் டயலர் ஐகானை ஸ்க்ரோல் செய்து பார்க்காமல் நிலையாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காண்டாக்ட் பிக்சர் அளவு பெரிதாகவும், திரையின் மேல்பகுதிக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ஆண்ட்ராய்ட் போன்களில் விரைவாக பட்டரி தீர்ந்துபோகும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

அதாவது நமக்குத் தேவையற்ற நேரங்களில் மறைமுகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள்தான் பட்டரியை குறைப்பதற்கு காரணம். எனவே, அவ்வாறு தேவையற்ற நேரத்தில் அப்ளிகேஷன்கள் செயல்படாமல் தடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்ட் ஸ்டேட்டஸ் பார் பகுதியில் புதியதாக ஃபோன் செட்டிங்ஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை ஸ்டேட்டஸ் பாரை இழுத்தால் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ், இமெயில் போன்ற விவரங்களையும் மற்றொரு முறை சேர்த்திழுத்தால் இயங்கும் அப்ஸ் செட்டிங்ஸ் மெனுவையும் பெறலாம். 

நோட்டிபிகேஷன்கள் பப்ளிக், பிரைவேட் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் லாக் ஸ்கிரீனிலேயே மேற்கண்ட நோட்டிபிகேஷன்களைப் பெறுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கால்குலேட்டர் வசதியில் எண்களையும், குறியீடுகளையும் தனித்தனியாக பிரித்து இரண்டு சாளரமாக காட்டும்படி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சைன், காஸ் போன்ற கணக்கீடுகளைச் செய்ய அலகுகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. 

கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற குறியீடுகளுடனேயே இந்த அலகுகளும் சேர்த்துத் தரப்பட்டுள்ளன. தற்போது கூகுள் நெக்சஸ் 5 மற்றும் நெக்சஸ் 7 போனில் பரிசோதனைக்காக வழங்கப்படும் இப்பதிப்பு செப்ரெம்பர் அல்லது ஒக்டோபரில் முழுப்பதிப்பாக வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger