Home » , » மறக்க முடியாத ஹொலிவூட் படங்கள்: பூமிக்குப் பிறகு

மறக்க முடியாத ஹொலிவூட் படங்கள்: பூமிக்குப் பிறகு

Written By Namnilam on Saturday, August 16, 2014 | 12:42 PM

பூமிக்கு வெளியே மனிதன் வசிப்பதற்கு ஏற்ற சூழலை மொத்த உலகமும் தேடி அலைகிறது. செவ்வாய் கிரகத்துக்கு சென்ற 'கியோரியாசிட்டி' விண்கலம் தன் பெயருக்கேற்ப உயிர்வாழ ஏற்ற சூழல் தென்படுமா என்று அக்கிரகத்தில் ஆர்வத்துடன் மேய்ந்து கொண்டிருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளின் தொன்மங்களும் பூமிக்கு வெளியே வேறொரு உலகம் இருப்பதாகவே நம்மை நினைக்க வைக்கின்றன. 

எல்லையற்ற கனவுகளை காட்சியாக்குவதன் சாத்தியத்தை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்ட ஹொலிவூட் திரையுலகம் தந்த பல படைப்புகள், பூமிக்கு வெளியேயான மனித வாழ்க்கை குறித்து பேசுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக ஜேம்ஸ் கமரோனின் 'அவதார்', முப்பரிமாண படமான 'வோல்-ஈ', மனோஜ் ஷ்யாமளனின் 'ஆப்டர் ஏர்த்' போன்ற படங்களை சொல்லலாம். 

வாழ்வதற்கான சூழல் பூமியில் முற்றிலும் சீர்கேடைந்த நிலையில், வேறு கிரகத்துக்கு குடியேறும் மனித வாழ்க்கை குறித்த படங்கள் இவை. அந்த வரிசையில், 'டிஸ்ட்ரிக்ட்- 9' படத்தின் மூலம் புகழ்பெற்ற நீல் ப்ளோம்காம்ப் இயக்கிய 'எலிஷியம்’ என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் இந்தியாவில் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாக உள்ளது. 

அறிவியல் கற்பனைகளுக்கும் அப்பால் அடிப்படை மருத்துவ வசதி, உயிர்வாழ மனிதன் செய்யும் தந்திரங்கள், எதிர்கால மனிதனின் வாழ்வுநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இக்கதையின் லேசான சாயல் கொண்ட 'வோல்-ஈ' படத்தில் குப்பைகள் நிறைந்த பூமியை காலி செய்துவிட்டு மொத்த மனித இனமும் விண்வெளியில் புதிய உலகத்தை படைத்து அதில் குடியேறி விடுகிறது. 

பூமியில் தேங்கிய குப்பையை சுத்தம் செய்யும் 'ஏழை' ரோபோதான் படத்தின் நாயகனான வோல்-ஈ. பூமிக்கு வெளியே குடியேறியவர்கள் நவீன வசதிகளால் சோம்பேறிகளாகி உடல் பெருத்து அவஸ்தைப்படுவதை நகைச்சுவையாக சொன்ன படம் அது. 'எலிஷியம்' வேறு வகை. கிட்டத்தட்ட நரகமாகி விட்ட பூமியில் வாழ சபிக்கப்பட்ட ஏழைகளுக்கும், மேம்பட்ட வாழ்க்கை தரும் 'எலிஷியம்' என்ற விண்வெளி குடியிருப்பில் குடியேறிய பணக்காரர்களுக்கும் இடையிலான வாழ்க்கைப் போராட்டம் இப்படத்தில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ரசிகர்களும், விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். 'போர்ன் ஐடெண்டிட்டி' வரிசை படங்கள் மூலம் உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள மேட் டாமன், 'சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்' படத்துக்காக ஒஸ்கர் வென்ற அற்புத நடிகை ஜூடி பாஸ்டர் இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கொடூரமான ரோபோக்களால் ஆளப்படும் பூமியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லாடும் ஏழைகள் அதிநவீன சுகாதார வசதி கொண்ட எலிஷியம் குடியிருப்புக்குள் திருட்டுத்தனமாக ஊடுருவ முயல்வது தான் படத்தின் முக்கிய கரு. ஊடுருவலை எதிர்க்கிறார் அக்கிரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜோடி பாஸ்டர். புவிவாழ் ஏழைத் தொழிலாளிகளில் ஒருவரான மேட் டாமன் பணியின் போது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்கும் அபாயத்துக்கு தள்ளிவிடப்படுகிறார். இடையே சதிவலை, ஏழ்மையின் வலி உள்ளிட்ட பல விஷயங்களை வியக்கவைக்கும் தொழில்நுட்பங்களுடன் உருவான இப்படம் நேர்த்தியுடன் சொல்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். 

படம் எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ள கதை கொண்ட படமாக ரசிகர்கள் கருதினாலும் இது நிகழ்கால கதை தான் என்கிறார் படத்தின் இயக்குநர் நீல் ப்ளோம்காம்ப். வறிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயலும் தற்காலச் சூழலை தான் படமாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. 

இதேபோன்ற கதைப் பின்னணி கொண்ட ‘ஆப்டர் ஏர்த்’ படம் படுதோல்வியடைந்தது. இத்தனைக்கும் மனோஜ் ஷ்யாமளன் தான் படத்தை இயக்கவேண்டும் என்று தவமாய் தவமிருந்தார் படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான வில் ஸ்மித். எனினும் திரைக்கதையில் இருந்த தொய்வும் வழக்கமான ஏலியன் பாத்திரப்படைப்பும் அப்படத்தை தோல்வியடையச் செய்துவிட்டன. 'எலிஷியம்' படத்துக்கு நிச்சயம் அந்த ஆபத்து இல்லை.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger