Home » » 447 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

447 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

Written By Namnilam on Saturday, August 30, 2014 | 11:36 AM

கடலில் மூழ்கிய பண்டைய நகரங்களைக் கண்டுபிடிப்பது நாகரீகங்களைத் தெரிந்து கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல கடலில் மூழ்கிய பழைய கப்பல்கள், அவற்றோடு புதைந்துபோன பொக்கிஷங்கள், அதனுடன் மடிந்த பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களின் எலும்புக்கூடுகள் ஆகியவற்றை கண்டுபிடிப்பது மேற்கத்திய உலகில் ஒரு கலாச்சாரமாகவே இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

நடந்த விபத்து அல்லது வரலாற்றின் சில புரிபடாத பக்கங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வமே 'ஓசனோகிராபிஸம்' என்ற ஒரு துறையாகவும் ஆய்வுக் கலாசாரமாகவும் வளர்ந்திருக்கிறது. இந்தத் துறையின் சமீபத்திய மிக ஆச்சரியகரமான கண்டுபிடிப்பு 'மார்ஸ் தி மேக்னிஃபீஸியண்ட்' என்ற கப்பல். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பைத்தியக்கார ராஜா என்று கருதப்பட்ட மன்னர் பதினான்காம் எரிக் 'மார்ஸ்' என்ற கொடிக் கப்பலைக் கட்டினார். இந்தக் கப்பல் மிகப்பிரம்மாண்டமான மார்ஸ் (Mars The Magnificient)என்று அழைக்கப்பட்டது. இந்த கப்பல் தனது பயணத்தை 500 ஆண்டுகளுக்கு முன் ஓலண்ட் கடற்கரையில் முடித்துக்கொண்டது. 

"குஸ்டாவ் வாசாவின் மகனான மன்னர் பதினான்காம் எரிக் தன்னுடைய தந்தை இறந்தவுடன் ஸ்வீடனின் புதிய கொடிக்கப்பலாக இந்தக் கப்பலைக் கட்டினார்" என்று ரோன்பி உள்ளூர் இதழான 'தி லோக்கல்' பத்திரிகையிடம் கூறியுள்ளார். அதற்கு முன்பு இதுபோன்ற பிரம்மாண்டமான கப்பல் கட்டப்பட்டதில்லை. 100 ஆண்டுகளுக்கும் அதிகமான வயது கொண்ட ஓக் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த பிரமாண்டக் கப்பலை தற்போது 447 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

லூத்ரன் குழுவின் சாதனை ஆய்வுக் குழுவினர் ஸ்வீடனின் நீர்மூழ்கியும், கடல் பயண தொல்லியலாளரும் ஆன ரிச்சர்ட் லூத்ரன் என்பவருக்கு இந்த ஆய்வை நடத்துவதற்கு நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி மானியம் வழங்கியுள்ளது. அவர் தன்னுடைய குழுவுடன் கடந்த 20 ஆண்டுகளாக கடும் தேடுதலை கடலுக்கடியில் நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக்காக 'பிரின்ஸ்' குட்டி நீர் மூழ்கி ரோபோவை லூத்ரன் பயன்படுத்தியுள்ளார். இந்த அதிரடி ஆராய்ச்சிக்குழு இந்த கப்பலின் சிதைவுகளை 447 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2011இல் கண்டுபிடித்து சாதனை படைத்தார்கள். 

ஆனால் என்ன கண்டுபிடித்தோம் என்பதை அவர்கள் முழுமையாக வெளிப்படுத்த வில்லை. அதைத் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். ஏன் முழ்கியது? 1564ம் ஆண்டில் நிலப்பேராசை கொண்ட மன்னர் பதினான்காம் எரிக் டேனிஷ் லூபெக் படைகளிடமிருந்து கைப்பற்றிய நிலங்களைத் தக்கவைத்துக் கொள்ள நடந்த பயங்கரமான கடல் போரில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. 

இரண்டு லூபெக் போர்க்கப்பல்கள் அதைச் சுற்றி வளைத்து தங்களை மார்ஸூடன் இணைத்துக் கொண்டன. லூபெக் கப்பல்களில் இருந்து சுமார் முந்நூறு வீரர்கள் மார்ஸின் தளத்துக்கு வந்தனர். அப்போது நடைபெற்ற போரில் கப்பலுக்கு தீ வைக்கப்பட்டது. ஒருவரையொருவர் குத்திக் கொன்றனர். கண்டுபிடிக்கப்பட்ட கப்பலின் சிதைவுகளில் மனித எலும்புகள் ஏராளமாக உள்ளன. 

இந்த கப்பல் குறித்து ஐந்து நூற்றாண்டுகளாக நீடித்த மர்மம் இனி மெல்ல வெளிவரலாம். அதற்கு முன் பிரின்ஸ் ரோபோ கண்டுபிடித்து எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் இங்கே பார்த்து ஆச்சரியம் அடையுங்கள். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger