Home » , » இன்று ரிச்சர்ட் அட்டன்பரோவின் 91ஆவது பிறந்த தினம்! ஹொலிவூட்டின் முதுபெரும் டைனோசர்

இன்று ரிச்சர்ட் அட்டன்பரோவின் 91ஆவது பிறந்த தினம்! ஹொலிவூட்டின் முதுபெரும் டைனோசர்

Written By Namnilam on Saturday, August 30, 2014 | 10:06 PM

உலக சினிமாவின் மாபெரும் மனிதன் மறைந்து விட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கூறினார். அவருடைய காந்தி படத்தைப் பார்த்த பின் நான் காந்தியைப் பற்றி ஏராளமாக அறிந்து கொண்டேன் என்று இந்திய திரைப்பட நடிகர்கள் வெளிப்படையாக கூறினர். 

டிக்கி என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபர், என்று மனித வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோ தனது 90ஆவது வயதில் கடந்த வாரம் லண்டனில் காலமானார். அவர் ஏராளமான ஹொலிவூட் படங்களில் நடித்துள்ளார். கணிசமான எண்ணிக்கையில் பல திரைப்படங்களை அவர் இயக்கியும், தயாரித்தும் உள்ளார். அவர் யுனிசெவ் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும் பல மனிதநேய அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். 

துடிப்புமிக்க ஆனால் சிறிய உருவம் கொண்ட, வட்ட முகமுடைய அவர் முகத்தில் குழந்தைத்தனம் என்றும் நிலைத்திருந்தது. நரைத்த வெள்ளைத்தலையுடன் அவர் இருந்த போதும் கூட அவருடைய முகத்தில் குழந்தைத்தனம் கலையவில்லை. அதற்கேற்றாற்போல் அவர் நடித்த முதல் ஆங்கில யுத்த படங்களில் இளம் கடற்படை வீரராகவோ, விமானப்படை வீரராகவோ நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

அவர் 1942ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமானார். "இன் விச் வீ சர்வ்" என்ற யுத்தகால திரைப்படத்தில் 19வயதான பயந்து நடுங்கும் மாலும் வேடத்தில் அவர் நடித்தார். அதுவொரு சிறிய பாகம் ஆனாலும், அவர் ஏற்று நடித்த பாத்திரம் ஒரு மறக்க முடியாததாகும். அந்த படம் சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருதைப் பெற்றது. 1947ஆம் ஆண்டில் ஒரு பதின்மபருவ ரௌடி பிங்கியாக அவர் நடித்த "பிரைட்டன் ராக்" திரைப்படத்தில் அவருடைய முகமும், அதன் குறும்புத்தனமும் அவரை ஒரு மறக்க முடியாத பாத்திரமாக்கிவிட்டது. 

பிரபல ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி தன்னுடைய "தி மௌஸ்டிராப்" நாவல் மேடையேறிய போது இவர் அதில் வரும் இளம் துப்பறிவாளர் வேடத்துக்கு பொருந்தமாட்டார் என்று கூறினார். ஆனால் 1952 நவம்பரில் அந்த நாடகம் மேடையேறிய போது அட்டன்பரோவும் அவருடைய மனைவி ஷீலா சிம்மும் இணைந்து நடித்தனர். அது தொடர்ந்து 700 தடவை மேடையேறி சரித்திரம் படைத்தது. ரிச்சர்ட் சாமுவேல் அட்டன்பரோ கேம்பிரிட்ஜில் பிரடரிக் லெவி அட்டன்பரோ - மேரி அட்டன்பரோ தம்பதியருக்கு மூத்த மகனாக 29.8.1923ஆம் ஆண்டில் அவதரித்தார். அவர் ஆங்கிலோ - சாக்சன் சட்டத்தில் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இவர் றோயல் ஏர் போர்ஸில் பணிபுரிந்தார். தொடக்க கால பயிற்சி முடிந்த பின்னர் இவர் ஆர்.ஏ.எப்.பிலிம் யூனிட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் பின்னர் யுத்தகளத்தில் போர்க்காட்சிகளை படமாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.போர் முடிந்த பின் இவர் நடிப்பை தனது தொழிலாக ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். 

பின்னர் இவர் றோயல் அக்கடமி ஆப் டிராமாடிக் ஆர்ட் என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஆயுட்காலம் முழுவதும் இந்த அமைப்பின் புரலவர் ஆக இருந்தார். இவர் காந்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். 1983ஆம் ஆண்டில் காந்தி திரைப்படத்துக்காக இவருக்கு சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் என்ற வகையில் இரண்டு ஒஸ்கார் விருதுகள் அளிக்கப்பட்டன. இவர் நான்கு பாப்டா விருதுகளும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளும் பெற்றுள்ளார். 

பிரைட்டன் ராக், தி கிரேட் எஸ்கேப், 10 ரில்லிங்டன் பிளேஸ், மிராக்கிள் ஆன் 34த் ஸ்டிரீட், ஜூராசிக் பார்க் ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்த பல படங்களில் நன்கு அறியப்பட்டவையாகும். 1959ஆம் ஆண்டில் இவர் சக நடிகர் பிரியன் போர்ப்ஸ் உடன் இணைந்து திரைப்படத்தில் ஈடுபடத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து தயாரித்த முதல் படமான தி ஆங்கிரி சைலன்ஸ் பலத்த வெற்றி பெற்றது. இருவரும் சேர்ந்து சில வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளனர். 

1969இல் இவர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 1970இற்குப் பின்னர் இவர் முழு இயக்குநராக மாறி விட்ட போதும் எப்போதாவது நடிப்பதும் உண்டு. காந்தி திரைப்படம் இவரை உலகின் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக மாற்றி விட்டது. காந்தி திரைப்படம் எட்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்று அக்கடமி விருது சாதனை படைத்தது. இவர் ஒரு மனிதநேய ஆர்வலர். மனித நேயப்பணிகளுக்காக இவர் 1983இல் வழங்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 

இவருக்கு பிரிட்டிஷ் அரசு 1976ஆம் ஆண்டில் சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 17 ஆண்டுகள் கழித்து இவருக்கு ஆயுட்கால பிரபு பட்டம் வழங்கப்பட்டது. இவர் ரிச்மண்ட் அபான் தேம்ஸ் பேரன் அட்டன்பரோ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டார். இவருடைய கடைசிக் காலம் மிகவும் துயரம் நிறைந்த காலமாக இருந்தது. 

2004 கிறிஸ்துமஸ் அன்று தாய்லாந்தைத் தாக்கிய சுனாமியில் இவருடைய மகளும், பேர்த்தியும் இறந்து விட்டனர். அதற்குப் பின்னர் அவர் கிறிஸ்மஸ் கொண்டாடுவது நின்று விட்டது. அவருக்கு மனைவி ஷீலா சிம் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு திரையுலக டைனோசர் மறைந்து விட்டது. ஆனால் இவருடைய திரைப்படங்கள் குறிப்பாக காந்தி திரைப்படம் இவரை உலகத்தினருக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger