Home » , , , , , , , , » யாழில் பால் கொள்வனவில் 'நெஸ்லே' நிறுவனம் ஆதிக்கம்;உள்ளூர் பால் உணவுப் பொருள் உற்பத்தி ஸ்தம்பிதம்

யாழில் பால் கொள்வனவில் 'நெஸ்லே' நிறுவனம் ஆதிக்கம்;உள்ளூர் பால் உணவுப் பொருள் உற்பத்தி ஸ்தம்பிதம்

Written By Namnilam on Saturday, February 22, 2014 | 8:16 PM

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பால் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனால் யாழ்.மாவட்டத்தில் சுய தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு உள்ளூரில் பால் உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடையும் நிலையில் உள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.  


Nestle-Feature


யாழ்.மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லீற்றர் பசுப்பால் ""நெஸ்லே'' நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டு தினமும் குருநாகலில் உள்ள தொழிற்சாலைக்கு பெளஸர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.    இந்த வகையில் யாழ்.மாவட்டம் முழுவதிலும் பாலை சேகரிப்பதற்கு 20 பால் சேகரிப்பு நிலையங்களும் புத்தூரில் மூன்று பெரிய அளவிலான குளிரூட்டி கொள்கலன்களுடன் கூடிய களஞ்சியமும் செயற்பட்டு வருகின்றது.


தற்போது தென்னிலங்கை நிறுவனம் ஒன்று (ஹாகில்ஸ் பூட் சிற்றி) மீசாலையில் பசுப்பால் கொள்வனவு நிலையத்தை ஆரம்பித்து யாழ். மாவட்டத்தில் நியமப்படுத்தப் பட்ட பால் கொள்வனவு விலையிலும் கூடிய விலையில் பாலை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளது.   நிறுவனத்தின் பால் கொள்வனவு நிலையங்கள் வலிகாமம் உட்பட யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. சாவகச்சேரி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பால் பொருள் உற்பத்தி தொழிற்பாட்டை மேல் நிலைப்படுத்துவதற்காக யு.என்.டி.பி நிறுவனத்தின் நிதி உதவியுடன் 20 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் பால் பொருள் உற்பத்தித் தொழிற்சாலை யொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   


அத்துடன் அதன் செயற்பாடுகள் பரீட்சார்த்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையம் முழுமையாக செயற்படுவதற்கு கணிசமான அளவு பால் தேவை.    மீசாலையில் தென்னிலங்கை நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு வசதியாக பால் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டிருப்பது சாவகச்சேரி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.   இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் யாழ். மாவட்ட சமாசத்தின் நெறியாளர் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப் பட்டு நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது.  


இந்த விடயத்தில் யாழ். மாவட்ட உள்ளூர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள், இந்த மாவட்ட மாணவர்களின் போஷாக்கு நிலையைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசனம் தெரிவிக்கப்பட்டது.   இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் தினங்களில் 150 மில்லி தூய பசுப்பால் வழங்குமாறு கல்வி அமைச்சு அறிவித்து ஏனைய மாவட்டங்களில் அது நடைமுறையில் உள்ள போதிலும் யாழ்.மாவட்ட மாணவர்களுக்கு அந்த வசதி இதுவரை கிட்டவில்லை.    அதற்குக் காரணம் யாழ்.மாவட்ட மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவு பாலை யாழ். மாவட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதனால் நடை முறைப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  


பாலர் முன்பள்ளிச் சிறுவர்களுக்கு தற்போது பாடசாலை தினங்களில் பால் வழங்கப்படு கின்றபோதிலும் பால் கொள்வனவில் ஏற்பட்டிருக்கும் ஏட்டிக்கு போட்டியான நிலை பாலர் முன்பள்ளி பால் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.   யாழ்.மாவட்டத்தில் தற்போது யாழ்.மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் (யாழ்கோ) மற்றும் பிராந்திய ரீதியில் செயற்படும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களும் பால்பொருள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.    தென்னிலங்கை நிறுவனங்கள் பால்கொள்வனவு, பால் உணவு பொருள் உற்பத்தியில் பலமான நிலையில் கால் ஊன்றி இருப்பது உள்ளூர் அமைப்புக்களின் செயற்பாட்டை காலப்போக்கில் ஸ்தம்பிதம் அடையச் செய்து குழப்பத்துக்கு உள்ளாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள், கூட்டுறவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger