Home » , , , , » மூன்றாவது நாளாக தொடரும் க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம்

Written By Namnilam on Monday, February 24, 2014 | 2:34 PM

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு மூன்றாவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இங்கு இணைக்கப்படுகின்றது:-


P1000415


வலி வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் தற்போதைய தேவை நிவாரணமும், மீள்குடியேற்றமும், வேலைவாய்ப்புமே. இவற்றைக்கூட நிறைவுசெய்ய முடியாத அரசு எமது மக்களுக்கு எந்த உரிமைகளை எப்படித் தரப்போகின்றது?


எமது பிரதேசத்தில் கடந்த முப்பது (30) வருட காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக எமது மக்கள் அளவு கடந்த துன்பங்களுக்கு மத்தியிலும் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்றும் அகதி முகாம்களிலும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியபொழுது எமது மக்களும் பரம்பரை பரம்பரையாக தாங்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்களையும், தளபாடங்களையும், வசித்துவந்த வீடுகளையும் கைவிட்டுவிட்டு கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தாங்களும் விடுதலைப் புலிகளுடன் தென்மராட்சியூடாக வன்னியை நோக்கி நகர்ந்தார்கள்.


இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களை அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தத்தமது காணிகளை அடையாளம் கண்டு தத்தமது வீடுகளில் மீள்குடியேறுவதற்கு வசதியாக பலாலியை நோக்கி தமது நிலைகளை முன்னகர்த்திய பொழுது மக்கள் தத்தமது வீடுகளில் குடியேறி தமது விளைநிலங்களில் பயிர்ச்செய்கையையும் ஆரம்பித்திருந்தார்கள்.


யுத்தம் முடிவக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து (5) வருடஙங்களாகிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்திருந்த எமது மக்கள் தமது உறுதிக் காணிகலேயே மீள்குடியேற முடியாது இன்றும் முகாம்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கி எமது சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


சனாதிபதி அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது “இறந்தவர்களை மட்டும் என்னால் மீட்டுத்தர முடியாது அதற்கு மாற்றீடாக தமிழ் மக்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்” என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஆனால் கௌரவ சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சில அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பு தொடர்பாக பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் “13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சனாதிபதி தயாரில்லை” என்று தெரிவித்திருந்தார்.


அண்மையில் வட மாகாணத்திற்கு வருகை தந்திருந்த கௌரவ காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை எக்காரணம் கொண்டும் அரசாங்கம் கையகப்படுத்தாது என்று உறுதி கூறியிருக்கின்றார். அத்துடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் திரு. உதய பெரேரா அவர்களும் இடம்பெயர்ந்து இருக்கின்ற வலிவடக்கு மக்களை அவரவர் சொந்த இடங்களில் மிக விரைவில் மீள்குடியேற்றுவதாக வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கத்திடம் உறுதி கூறியிருக்கின்றார்.


அந்நிய இராணுவம்போல் எமது மக்களின் வாழ்விடங்களையும் விளைநிலங்களையும் அரச படைகள் ஆக்கிரமித்து இன்றுவரை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்றது.


இராணுவம் தனது மனோநிலையை மாற்றி தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்ற வலிவடக்கு பிரதேச மக்களின் வீடுகளிலிருந்தும் விளைநிலங்களிலிருந்தும் விலகி தனது நிலைகளை எமது மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் நடேசுவரா கல்லூரியை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்காகவும் பலாலி இராணுவ முகாமை நோக்கி முன்னகர்த்துவதன் மூலம் வழிசமைத்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு மிக விரைவாக ஆவன செய்ய வேண்டுமென்றும், அதேபோல கடற்படையும் தனது மனோநிலையை மாற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற சம்பூர் பிரதேச மக்களின் நகர மையத்திலிருந்தும் வீடுகளிலிருந்தும் விளைநிலங்களிலிருந்தும் விலகி தனது நிலைகளை எமது மக்களின் மீள்குடிறேறத்திற்காக வெளிச்சவீட்டை நோக்கியும் கடற்கரையை நோக்கியும் நகர்த்துவதன் மூலம் வழிசமைத்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு மிக விரைவாக ஆவன செய்ய வேண்டுமென்றும், ஏற்கனவே உறுதிமொழி வழங்கப்பட்ட உலர் உணவு கொடுப்பனவுகளை வலிவடக்கு சம்பூர் கிராம மக்களுக்கு மிக விரைவாக வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரியும், அத்துடன் ஏற்கனவே வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பாதயாத்திரையின்போது முன்வைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விரைவான விடுதலைக்கும், காணாமற் போனவர்கள் சம்பந்தப்பட்ட விரைவான நீதியான விசாரணைக்கும், அவர்களின் விடுதலைக்கும், கடந்த கால போராட்ட சூழ்நிலையில் அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட எமது மக்களின் மேம்பாட்டிற்கும் நிறைவானதும், நியாயமானதுமான கொடுப்பனவுகளுக்கும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் பாதுகாப்பிற்கும், அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவுகள், அரச வேலை வாய்ப்புகளுக்கும், மாகாணசபையை எந்தவொரு இடையூறுமின்றி இயங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மத்திய அரசாங்கத்தையும், சனாதிபதியையும் கோரி அரசியல் கட்சிகளுடனும், வெகுஜன அமைப்புக்களுடனும், ஒன்றிணைந்து அடக்கு முறைகளுக்கு எதிரான சனநாயக அமைப்பு எமது மக்கள்மீதும் அவர்களது நல்வாழ்விலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அனைத்து தமிழ் மக்களின் ஆதரவுடன் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை 2014ஆம் ஆண்டு மாசி மாதம் 21ஆம் திகதியன்று ஆரம்பித்து இன்றுடன் மூன்றாவது நாளாகவும் நடாத்தி வருகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger