இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இருந்த இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டுமென உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
வாழைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றார்கள். இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு அரசு ஒத்துக் கொண்டுதான் பாராளுமன்ற தெரிவுக் குழுவை உருவாக்கி இருக்கின்றது.பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கியிருக்கின்ற பொழுதிலும் கூட சிறுபான்மை இன மக்களுடைய பிரதானமான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் அங்கம் வகிக்கவில்லை. பல இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை.
இந்த பாராளுமன்றக் குழு முறைமை மீள் பரிசீலனை செய்யப்பட்டு, புதிதாக தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்ற மாகாண தலைமைத்துவமாக இருக்கின்ற வடமாகாண சபையின் பிரதி நிதிகளும், மூவின மக்களும் சமமாக வாழ்கின்ற கிழக்கு மாகாண சபை பிரதி நிதிகளும் புதிதாக உள்வாங்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கான களம் திறக்கப்பட வேண்டும்.
ஏனைய கட்சிகளும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டு உள்ளூரிலே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திட்டத்தினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார்.
Post a Comment