Home » » இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணை கோருகிறது

இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணை கோருகிறது

Written By Namnilam on Wednesday, March 12, 2014 | 10:49 AM

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார்.


சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார். அமெரிக்காவின் பிரேரணை முன்வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தலைவர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கூட்டாக அறிக்கை ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.

ஜெனீவா பிரேரணையின் முன்வரைவில் அடங்கியுள்ள விசாரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது என்றும் அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.

அதேநேரம், தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெறவேண்டும் என்றும் அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, 'மனித உரிமைகள் உயர் ஆணையர் தனியான விசாரணை நடத்தவேண்டும்' என்று தீர்மானத்தின் முன்வரைவு கூறுகின்றமையை சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

'ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நடத்துகின்ற விசாரணை, சர்வதேச விசாரணையாகவே இருக்க முடியும்' என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், 'சர்வதேச விசாரணை என்ற சொற்பதம் இல்லை என்பதற்காக அதனை நாங்கள் எதிர்க்க முடியாது' என்றும் தெரிவித்தார்.

'மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் மிகவும் நிதானமாக வதானமாக பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கிறது' என்றார் சம்பந்தன். இதேவேளை, அமெரிக்கத் தீர்மானத்தின் முன்வரைவு கடந்த வாரம் வௌியானபோது, அந்தத் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் கொண்டுவரப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவித்திருந்தார். ஆனால், 'அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கிறது, நாங்களும் அதனை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை இலகுவாக கைகழுவி விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது' என்று கூறினார் இரா. சம்பந்தன்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger