Home » » நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க ஒருதலைப்பட்சமானது, இலங்கை அரசாங்கம்

நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க ஒருதலைப்பட்சமானது, இலங்கை அரசாங்கம்

Written By Namnilam on Thursday, March 13, 2014 | 11:08 AM

ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமானது. இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் நேற்று சுதந்திரக்கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.


நவநீதம்பிள்ளை சொல்வது இதுதான் முதற்தடவையும் அல்ல. நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது யாழ்ப்பாணம் சென்றார்.அங்கு அவரை சந்திக்க எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலம் அனுமதி கேட்டபோதும் அவர் சந்தர்ப்பம் வழங்காமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கினார். அப்போதே எமக்குத் தெரியும் அவரது அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்று. அது ஒருதலைப்பட்சமாகவே அமையும்.


அவரது அறிக்கையில் 11 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இறுதியாக போரினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் இலங்கை வந்தபோது முள்ளிவாய்க்காலில் பிரபாகரனுக்காக மலர் வளையமொன்றை வைக்க முயற்சித்தார். அவரால் அன்று இயலாமல் போனதை செய்ய முயன்றுள்ளார். மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையைப் பற்றி ஒன்றும் தெரியாமலேயே இவர்கள் பிரேரணைகள் கொண்டு வருகிறார்கள். பயங்கரவாத தடைச் சட்டம் 1979 களிலேயே கொண்டுவரப்பட்டது. அது 82 மற்றும் 89களில் திருத்தப்பட்டது. ஐ. தே.கவினரே இந்த சட்டத்தை கொண்டு வந்தனர். இதை நீக்குவதாயின் எழுந்தமானத்தில் செய்துவிட முடியாது. பாராளுமன்றத்தினூடாகவே செய்யவேண்டும்.


இறுதி யுத்தத்தில் 40,000 பேர் இறந்ததாக கூறுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை.சுனாமி போன்ற ஒரு பேரழிவின் மூலம் இவ்வாறான ஒரு தொகை இறந்திருக்கலாம்.ஆனால் அப்பட்டமான முறையில் இவ்வாறான தொகையினர் இறந்துவிட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.88, 89, 90களில் தெற்கில் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். டயர்களில் எரிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக ஏன் விசாரணைகள் செய்யப்படவில்லை. புலிகளினால் செய்யப்பட்ட படுகொலைகள், மனித உரிமைகள் மீறல்கள் பற்றி ஏன் பேசவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger