இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இம்மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கும் இங்குள்ள மீனவர் சங்க பிரிதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படுகின்ற தரப்பினர்களில்லாத பேச்சுவார்த்தையின் மூலமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலும் சுமூகமான தீர்வை ஒரு போதும் ஏற்படுத்த முடியாதென்றும் எமிலியாம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் சகலதையும் இழந்த நிலையில், பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியிருந்த இங்குள்ள மக்கள் தற்போது வாழ்வாதார ரீதியாகவும் தொடர்ந்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் வட பகுதி கடல் வளம் அழிவடைந்து வருவதுடன், இங்குள்ள கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடர்பில் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவின் தலை நகர் புதுடில்லியிலும் தமிழ் நாட்டிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றது. இதன்போது, இங்குள்ள மீனவர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.
இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டுமென்று நாம் உட்பட வடக்கிலுள்ள பல மாவட்டங்களின் பிரதிநிதிகளும் கோரியிருந்தனர். ஆனால், நாம் விடுத்த அத்தனை கோரிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. இதன்போதும் இந்திய மீனவர்கள் அத்துமீறக் கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற நிலையிலும், கடந்த சில தினங்களிற்கு முன்னரும் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கின்ற நிலையில், தற்போது இதன் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையில் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஊடகங்கள் மூலமாக அறிந்திருக்கின்றோம்.
ஆனால், இதற்கும் எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் எம்மை அழைப்பார்களென்றே எதிர்பார்க்கின்றோம். இதனைவிடுத்து எம்மை அழைக்காமல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலும் எவ்வாறு யாருடன் பேசி தீர்வை ஏற்படுத்தப் போகின்றார்கள். அவ்வாறு ஏற்படுத்தப்படும் தீர்வின் மூலமாக சுமூகமான நிலையை ஏற்படுத்த முடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆகவே, எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு எங்களை அழைக்க வேண்டுமென்றும், இதன் மூலமாகவே சிறந்த தீர்வை ஏற்படுத்துவதுடன், இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலும் நல்லதோர் உறவைக் கட்டியெழுப்ப முடியுமென்றும் எமிலியாம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment