Home » » மன்னாரில் அரச காணிகளை அபகரிக்க முயற்சி (படங்கள்)

மன்னாரில் அரச காணிகளை அபகரிக்க முயற்சி (படங்கள்)

Written By Namnilam on Saturday, March 1, 2014 | 8:46 PM

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி - சாவற்கட்டு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள தனியார் காணிகள், அபகரிக்கப்படுவதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலப்பகுதியில், 30 வீட்டுத் திட்டம் ஒன்று இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. 1 2


இவர்களின் பொது தேவைகளுக்கென இந்த 30 வீட்டுத்திட்டத்தின் முன் பகுதியில் 1 ஏக்கர் அளவிலான காணி ஒன்று ஒதுக்கப்பட்டு இருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 1973ம் ஆண்டு குறித்த காணி ஒதுக்கப்பட்டுள்ளதோடு 1988ம் ஆண்டு இதற்கான சேவையர் படம் வரையப்பட்டுள்ளது. 

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான இந்த காணி எதிர்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்படவிருந்தது. எனினும் குறித்த காணி நெடுங்காலமாக கவனிபாரற்று காணப்பட்டது இந்தநிலையில் இதனை மன்னார் நகர சபை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கென சிறுவர் பூங்கா மற்றும் பொது மண்டபம் ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு தீர்மானித்திருந்தது. 

இதன்படி காணியை மன்னார் நகர சபைக்கு வழங்குவதற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்றிரவு குறித்த 30 விட்டுத் திட்டத்திற்கு முன்பாக அமைந்துள்ள இந்தக் காணியை அபகரிக்கும் நோக்கில் அரசியல்வாதி ஒருவர் அக் காணியை பார்வையிட்டுள்ளார் . இதனை தொடர்ந்து இன்று (01) காலை குறித்த பகுதிக்கு வந்த பிரபல வர்த்தகர் ஒருவர் தனது சகாக்களுடன் காணியில் கதிகால்கள் நட்டு காணியை அபகரிக்க முற்பட்டுள்ளார். 

இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் மன்னார் நகர சபைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, குறித்த பகுதிக்கு வந்த நகர சபையின் உப தலைவர் ஜேசுதாசன் ஜேம்ஸ் மற்றும் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் குறித்த விடயம் தொடர்பாக இரு தரப்பினருடனும் கலந்துரையாடி அந்தக் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது குறித்த காணியை நகரசபை பெற்று பொது தேவைக்கு பயன்படுத்த உள்ளது எனவே அதனை அடைப்பதை கைவிடுமாறு தெரிவித்தனர். 

எனினும் குறித்த காணி அபகரிப்பில் ஈடுபட்ட நபர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, காணி தமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளனர். இதன்படி மன்னார் பிரதே செயலாளரினால் 2006ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் அண்மையில் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட சோழவரி பற்றுசீட்டு என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக 2006ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலாளராக கடமையாற்றியவரிடம் சாவற்கட்டு கிராமசேவகர் தொடர்பு கொண்டு 2006ம் ஆண்டு குறித்த காணிக்கான அனுமதிபத்திரத்தை வழங்கியது தொடர்பில் வினவியபோது, அவர் (பிரதேச செயலாளர்) தாம் அவ்வாறு வழங்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டு அப்போலி ஆவணத்தை மன்னார் நகர சபையிடம் காட்டி நகரசபையின் சோழவரியினை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

எனினும் குறித்த காணியை குறித்த வர்த்தகர் பலவந்தமாக பிடித்து அடைத்ததை அடுத்து, கிராம மக்களும் பொதுதேவைக்கென கற்தூண்கள் இட்டு அதனை அடைத்துள்ளனர். இதன்பின் குறித்த பகுதிக்கு வந்த மன்னார் நகரசபையின் முதல்வர் எஸ்.ஞானபிரகாசம் மக்களுடன் கலந்துரையாடி காணி பிணக்கு தொடர்பாக கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் குறித்த காணி பிணக்கு தொடர்பாக எதிர்வரும் திங்கள்கிழமை மன்னார் பிரதேச செயலாளருடனான சந்திப்பொன்று நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger